சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா: விக்கிரமன்,பொன்னீலன் ரூ.2 1/2 லட்சம் பரிசு பெற்றனர் சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா: விக்கிரமன்,பொன்னீலன் ரூ.2 1/2 லட்சம் பரிசு பெற்றனர்
சென்னை, செப்.29-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில், தினத்தந்தி சார்பில், ரூ.2 1/2 லட்சம் இலக்கியப்பரிசு விக்கிரமன், பொன்னீலன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் இந்த பரிசுகளை வழங்கினார். தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளையொட்டி, இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி, மூத்த தமிழறிஞருக்கு ரூ.1 1/2 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழாவும், சி.பா.ஆதித்தனாரின் 108-வது பிறந்தநாள் விழாவும், தினத்தந்தி சார்பில் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை, ராணி சீதை மன்றத்தில் நடந்தது.
விழா மேடையில் சி.பா.ஆதித்தனார் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் தலைமை தாங்கினார்.
மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் தலைமை உரையாற்றினார்.
பின்னர், இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது விக்கிரமனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் பொன்னாடை அணிவித்து ரூ.1 1/2 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசை, எழுத்தாளர் பொன்னீலன் பெற்றார். பொன்னீலனின் மறுபக்கம் என்ற நூலுக்கு இந்த பரிசு கிடைத்தது. எழுத்தாளர் பொன்னீலனுக்கு பொன்னாடை அணிவித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து விழாவுக்கு தலைமை தாங்கிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணனுக்கு மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
பின்னர் விக்கிரமன், பொன்னீலன் ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவரையும், மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய விழாவுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் கல்யாணி மதிவாணன், புகழ்மிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். இவருடைய தந்தையார் குத்தாலிங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.
தந்தை துணைவேந்தராக இருந்த அதே பல்கலைக்கழகத்தில், அவருடைய புதல்வியாரும் துணை வேந்தராகப் பதவி வகிப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களாக இதுவரை 15 பேர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் முதலாவது பெண் துணைவேந்தர் என்ற பெருமைக்கு உரியவர் டாக்டர் கல்யாணி மதிவாணன்.
சிறந்த துணை வேந்தர் என்ற விருதை இவருக்கு செஞ்சிலுவை சங்கமும், 2012-ம் ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற விருதை சர்வதேச பெண்கள் சங்கமும் வழங்கியுள்ளன. மற்றும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றவர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பெரும் புகழோடு விளங்கும் அவர், நம் விழாவுக்குத் தலைமை தாங்கி, விருதுகளை வழங்க வருகை தந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும்.
இந்த ஆண்டு மூத்த தமிழறிஞர் விருதைப் பெறுகிறவர் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமான விக்கிரமன். 1961-ம் ஆண்டில் அமுதசுரபியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற அவர் தொடர்ந்து 52 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அப்போது இவர் உருவாக்கிய எழுத்தாளர்கள் பலர். நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், இலக்கிய ஆராய்ச்சி இப்படி பல்வேறு துறைகளில் 64 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அவற்றில் 37 புத்தகங்கள், சரித்திர நாவல்கள். அவற்றில் சோழ இளவரசன் கனவு என்ற நாவல், தமிழக அரசின் பரிசு பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி மற்றும் தஞ்சை பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதுகளைப் பெற்றவர்.
அவருக்கு மூத்த தமிழறிஞர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு இலக்கியப் பரிசைப் பெறும் பொன்னீலன், ஏற்கனவே சிறந்த நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதி புகழ் பெற்றவர்.
சாகித்ய அகாடமி பரிசைப் பெற்றவர். இப்போது நம் பரிசைப் பெறும் மறுபக்கம் என்ற அவரது நாவல், ஒரு அபூர்வமான கலைப்படைப்பு. இந்த நாவலை உருவாக்க அவர் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார். பல இடங்களுக்குச் சென்று ஆய்வுகள் நடத்தி இருக்கிறார்.
அறிஞர் பெருமக்களுடன் விவாதம் செய்து இருக்கிறார். அதனால்தான் இந்த நாவல் உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கிறது. அவருக்கு, இலக்கியப் பரிசு ரூ.1 லட்சத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் பேசினார்.
விழா நிகழ்ச்சிகளை, தினத்தந்தியின் பொது மேலாளர் டி.ஆர்.பீம்சிங் தொகுத்து வழங்கினார். விழா முடிவில், தினத்தந்தியின் பொது மேலாளர் (நிர்வாகம்) ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன், கவிஞர் வைரமுத்து, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், ஹெலன் டேவிட்சன் எம்.பி., காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மயிலை பெரியசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சா.கணேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பொருளாளர் திருப்�® �ூர் அல்தாப், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற மாநில தலைவர் சவுந்தர் முருகன், பொதுச் செயலாளர் கடலூர் ஜெயச்சந்திரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், எம்.ஜெயபால்.
தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார், காங்கிரஸ் பிரமுகர் இதயதுல்லா, மூத்த வக்கீல் காந்தி, சிறுபான்மை சமூக புரட்சி இயக்க நிறுவன தலைவர் கா.லியாகத் அலிகான், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் புருஷோத்தமன், தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் வக்கீல் மூ.பழனிமுத்து, தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.