Tuesday, 15 October 2013
அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: பாரதீய ஜனதா கோரிக்கை U.S. weapons ship seizure
Tamil NewsToday, 10:41
புதுடெல்லி, அக்.16-
அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கேட்டுக்கொண்டு உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தூத்துக்குடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 'சீ மேன் கார்டு' என்று அமெரிக்க கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து உள்ளனர். ஆயுதங்களுடன் அந்த கப்பல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
அந்த கப்பலின் சட்டரீதியான அங்கீகாரம் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. அதில் இங்கிலாந்து, எஸ்டோனியா, உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இந்தியர்களும் இருக்கிறார்கள். அந்த கப்பலுக்கு முறையான உரிமம் உள்ளதா? இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி பெற்றுள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக தெரியவில்லை.
அந்த கப்பல் எப்போது கொச்சி துறைமுகத்துக்கு வந்தது என்பது பற்றியும் தெரியவில்லை. தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படும் அந்த கப்பல் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் வந்து உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை முறைப்படி கையாளும் செயல்திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்பது தெரிய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்து உள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்திய கடல் பகுதியின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. கொச்சியில் முறைப்படியான சோதனை நடத்தப்பட்ட பின்னர் தான் அந்த கப்பல் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதா? அந்த கப்பல் அடுத்து போய்ச் சேரவேண்டிய இடம் எது? அங்கு ஏன் போய்ச் சேரவில்லை? அவர்கள் தூத்துக்குடியில் எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இவற்றுக்கெல்லாம் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்து கூறுகையில்; அந்த கப்பல் கடற்கொள்ளையை தடுக்கும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும், அந்த கப்பல் ஆயுத விற்பனையில் ஈடுபடும் கப்பலாக இருக்கும் என தான் கருதவில்லை என்றும் கூறினார்.
விசாரணைக்கு பின்னர்தான் அந்த கப்பலை பற்றிய முழு விவரமும் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
...
Show commentsOpen link