Sunday, 3 March 2013
பூந்தமல்லி, மார்ச். 3-
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. இவரது தங்கை தேவி (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய்-தந்தையை இழந்த இருவரும் போரூர் லட்சுமி நகரில் வசித்து வந்தனர். வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் குறைந்த பணத்தில் விஜயா தங்கையை காப்பாற்றினார். வறுமையில் வாடிய நிலையிலும் தேவியை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார். அவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
விஜயா தங்கி இருக்கும் வீட்டின் மாடியில் கட்டுமான பணிகளை உரிமையாளர் மேற்கொண்டார். இதற்காக சில நாட்களாக மணல், ஜல்லி இறக்கி வந்தனர். நேற்று காலை வீட்டு வேலைக்காக விஜயா வெளியில் சென்றார். தேவி மட்டும் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் லோடு ஆட்டோ டிரைவர் மதுரவாயலை சேர்ந்த மகாதேவன் (34) கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து இறக்கினார். தேவி தனியாக இருப்பதை அறிந்து அவர் நைசாக பேச்சு கொடுத்தார். தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டினார்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி தேவியை கற்பழித்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய விஜயா, உடலில் காயத்துடன் தங்கை தேவி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் கேட்ட போது கற்பழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பூந்தமல்லி உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ் பெக்டர் ஷேக்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த டிரைவர் மகாதேவனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவி தேவியை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.