Friday, 10 February 2012
சென்னையில் நேற்று பள்ளி ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. சினிமா, டி.வி.க்களில் வரும் வன்முறை காட்சிகளே இந்த கொலைக்கு காரணம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் வருத்தம் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்படும் சம்பவத்தை தமிழ்நாட்டில் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை. சினிமா, டி.வி.க்களில் வன்முறை தூண்டும் காட்சிகளால் மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் என்றார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், சினிமா பாடல்கள்மேல் சாடினார்.
'நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'திருடாதே பாப்பா திருடாதே', 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி', 'வாழ நினைத்தால் வாழலாம்' என பழைய பாடல்கள் குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க பயன்பட்டன.
ஆனால் இப்போது 'ஒய்திஸ் கொலைவெறிடி', 'உதடா அவளா வெட்டுடா அவள', 'எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்', 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்றெல்லாம் பாடல்கள் வருகின்றன. இவை மாணவர்கள், இளைஞர்கள் மனதில் வன்முறை தனமான வக்கிரங்களை பதிய வைக்கின்றன. ஆசிரியையை மாணவன் கொன்றத்திற்கு இது போன்ற பாடல்கள்தான் காரணம் என்றார்.
மயிலாப்பூரைச் சேர்ந்த கவுதம் கூறும்போது, 'சினிமா பாடல்கள் இப்போதைய தலைமுறையை ஒழுக்கமில்லாதவர்களாக மாற்றி வருகின்றன. சினிமாவில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.