துறவு என்பது பெருமளவுக்கு இந்தியச் சமயங்களுக்கு உரியது!
துறவு என்பது உடைமைத் துறவு மற்றும் காமநீக்கம்!
பற்று நீக்கம் என்பது துயர நீக்கம்! துயரம் என்பது உடைமை சார்ந்தும், காமம் சார்ந்தும் வருவதால், துயரத்திலிருந்து முற்றாக விடுபட விரும்புபவர்கள் இவை இரண்டிலிருந்தும் முற்றாக விடுபட்டு விடுவார்கள்!
பற்றில் உழல்பவர்களைப் பற்றற்ற துறவிகளே தூக்கி நிறுத்த முடியும் என்பதால், துறவிகளுக்கு இலக்கணம் வகுக்கின்ற பணியைப் புத்தன் செய்தான்!
ஒரே வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் பிச்சை கொள்ள வேண்டாம் என்றான் புத்தன்! அது அவ் வீட்டாரோடு தொடர்பும், அதன் வழியாகப் பற்றும் வளரக் காரணமாகுமாம்!
ஒரே மரத்தடியில் மூன்று நாட்களுக்கு மேல் படுத்துறங்க வேண்டாம் என்றும் சொல்கிறான். வேறொருவன் அங்கு படுத்துறங்க நேரிட்டால், அவனிடம், ""எழுந்திரு; இந்த இடம் என்னுடையது'' என்று மல்லுக்கு நிற்க நேரிடும். எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்து, கேவலம் இந்த மரத்தடி இடத்தை உரிமை பாராட்டுகின்ற அசிங்கங்கள் நேரிடும்! மனத்தின் நீர்மை இப்படிப்பட்டதுதான் என்பதால், "கருத்தோடிருங்கள், கருத்தோடிருங்கள்' என்று பன்னிப் பன்னிச் சொல்லுவான் புத்தன்!
புத்தன் மன்னனாக இருந்தவன்; எல்லையற்ற செல்வத்தின் மீது மட்டுமன்று; மக்களின் ம� ��தும் அதிகாரம் உடையவனாக இருந்தான்!
பல்லாயிரம் பேருக்கு வகைப்பாடுடைய விருந்தளிக்க முடிந்தவன், ஒரு மஞ்சளாடை அணிந்து தன்னுடைய உணவுக்காக ஓர் எளிய குடிசையின் முன்னால் கையேந்தி நிற்பதற்கு முன் வந்ததையும், அதிகார மணிமுடியைத் துறந்துவிட்டுத் தலையை முண்டிதம் செய்து கொண்டதையும் சிந்தித்துப் பார்க்கும்போது, துறவு நிலை அரச நிலைக்கும் மேலானதாய் இருக்க வேண்டும் என்று புத்தனின் துறவால் உய்த்த றிய முடிகிறது!
அரசனாக இருந்து துறவியாக மாறிய இன்னொருவன் பத்ரகிரி. ஒரு கோயிலின் மேற்கு வாயிலில் பிச்சையைப் பெறுவதற்கு ஓர் ஓட்டினை வைத்திருந்ததற்காகவும், தன்னை ஒட்டிக் கொண்ட நாயை வி� �ட்ட மனம் ஒப்பாது அதை வளர்த்து வந்ததற்காகவும், "பத்ரகிரி ஒரு சம்சாரி' என்று அந்தக் கோயிலின் மேற்கு வாயிலில் இருந்த பட்டினத்தார் கேலி செய்தாராம்!
காரணம் ஓர் ஓடு கூட ஓர் உடைமைப் பொருளாகும் என்றெண்ணிப் பட்டினத்தார் கைகளைச் சேர்த்தே பிச்சை ஏற்று உண்டவராம்!
""உடை கோவணம் உண்டு; உறங்கப் புறந்திண்ணை உண்டு; பசி வந்தால் உணவிட வீதிக்கு நல்ல � �ாதர்கள் உண்டு இந்த மேதினியில்! ஏதுக்கு நீ சலித்தாய் மனமே'' என்று மனத்தினைச் சவுக்கால் அடித்து ஒழுங்கு செய்யும் இயல்பினர் பட்டினத்தார்!
காவி என்பது துறவின் அடையாளம்; அதை அதற்குத் தகுதியில்லாதவன் அணியக் கூடாது! பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! "பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று' (273).
ஆதீனங்களாக இருப்பவர்கள் பேசும்போது, "நான் சொன்னேன்' என்று சொல்ல மாட்டார்கள். "� ��ாங்கள் சொன்னோம்' என்றுதான் சொல்லுவார்கள்! "நான்' என்பது அகந்தைச் சொல்லாம்; "நான்' "எனது' என்னும் சொற்களைக் கூடத் துறந்து விட்டிருக்க வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், இவர்களின் மடங்களுக்குள் பதுக்க� �� வைத்திருக்கிற சொத்தையும் பணத்தையும் சோதனையிட வருமானவரித் துறை வருகிறது!
"என்னிடம் கோவணத்தையும் உத்திராட்சத்தையும் தவிர வேறென்ன இருக்க முடியும்' என்று சொல்ல வேண்டியதுதானே! "இன்ன மந்திரியின் ஏவல் இது' என்று ஏன் புலம்ப வேண்டும்?
ஒரு காலத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல், ஆதீனகர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம் விடப்படுகின்றன.
பழைய ஆதீனகர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம்; தங்கச் சிம்மாசனம்; தங்கச் செங்கோல் - அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ? இந்திய ரூபாய் மதிப்புச் சரிந்து வருவதால் அமெரிக்க டாலராகவே வழங்கப்படலாம்!
சர்வதேச மதிப்புக்குச் சம்பந்தர் மடத்தை உயர்த்த வருகிறவருக்கு சர்வதேச மதிப்புள்ள டாலருக்கா பஞ்சம்?
இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்களெல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப்படுவதுபோல, இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக் கொண்டபோது இ� �்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக் கொடுமை!
அரசியல்வாதிகள் மீது குற்ற வழக்குகள் பெருகப் பெருக "இவ்வளவுதானே' என்று அவர்கள் வெட்கத்தை உதிர்த்து விடுவது போல, ஆதீனகர்த்தர்களும் சொரணை இல்லாமல் போய் விடுவார்கள் போலிருக்கிறது!
ஆதீனகர்த்தர்களின் எண்ணிக்கை இருநூற்றுத் தொண்ணூறைத் தாண்டிவிட்டது. ஞானசம்பந்தரைத் தவிர வேறு யாரையாவது யாருக்காவது நினைவிருக்கிறதா? ஞானசம்பந்தர் தங்கச் செங்கோல் வை� ��்துக் கொண்டா சைவத்தை வளர்த்தார்?
ஞானசம்பந்தர் சைவத்தை வளர்த்தார் என்பதன் பொருள் பெளத்தத்திலிருந்தும் சமணத்திலிருந்தும் எண்ணில் அடங்காதவர்களை மதம் மாற்றினார் என்பதல்லவா!
இப்போது சைவம் யாரையும் தன்னுடைய மடிப்புக்குள் புதிதாக அனுமதிப்பதில்லை. ஒருவன் சைவன் என்றால் அவன் சைவனாகவே பிறக்கிறான் என்பதுதான்!
ஏனெனில் சைவனாகப் பிறப்பவனுக்குச் சமய அடையாளம் மட்டும் போதாது. அவனுக்குச் சாதி அடையாளமும் வேண்டும்!
ஒரு வெள்ளைக்காரனைச் சைவ சமயத்தில் சேர்ப்பதாக இருந்தால், அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பதற்கு விடை கண்டாக வேண்டும்!
அவனைச் சேர்த்துக் கொள்ள எந்தச் சாதியும் இசையாது! சாதி உறுப்பினர்கள் சேர்க்கப்படுபவர்கள் அல்லர்; பிறப்பவர்களே!
இதே நிலைதான் சைவத்திற்கும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் சைவர்களின் எண்ணிக்கை கூட முடியுமே தவிர, வேறு எந்த விதத்தாலும் கூட்ட முடியாது. சைவ மடங்களை எல்லாம் மூடி விட்டால� ��ம் இந்த எண்ணிக்கை மாறப் போவதில்லை.
தமிழனுக்குத் தனியான நிலம் உண்டு; தனியான மொழி உண்டு; தனியான பண்பாடு உண்டு. தனிய� ��ன சமயங்கள் உண்டு; தனியான மெய்யியல் கொள்கைகளும் உண்டு.
ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரசாவர்க்கார் காலம் தொட்டுத் தமிழர்களெல்லாம் இந்துக்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். அப்படி ஒரு பொதுமை வழக்கு உருவாக்கப்பட ்டு விட்டது. இந்துக்களின் மெய்யியல் நூலாகப் பகவத் கீதை ஆக்கப்பட்டது!
தமிழனின் சமய அடையாள இழப்புக் குறித்து எந்தச் சைவ, வைணவ மடங்களாவது போராடியதுண்டா? எதற்கு ஆயிரம் வேலி நிலம்? எதற்குத் தங்கச் செங்கோல்?
தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவைதாம். மூதாதையரைத் "தென்புலத்தார்' (43) என்பான் அறிவுப் பேராசான் வள்ளுவன்!
தமிழனின் சமய நூல்கள் நாயன்மார்களின் திருமுறைகளும், ஆழ்வார்களின் பிரபந்தங்களும், திருமுருகாற்றுப் படையும், உலகிலேயே மிகச் சிறிய நூலான பன்னிரண்டே சூத்திரங்கள் அடங்கிய சிவஞான போதமுமேதாம்; தமிழர்கள் எல்லாரும் ஒப்ப முடிந்த வேத நூல் சமயங் கடந்த திருக்குறளாகும்! ஒர� � காலத்திலும் கீதை தமிழனின் மெய்யியல் நூலாக முடியாது என்று எந்த ஆதீனமாவது தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுண்டா?
ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார்; அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றினார்! சமணம் ஒழிந்தது; சைவம் தழைத்தது; மெத்தச் சரி!
திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப்பட� �டபோது, எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கழைத்ததுண்டா? அப்படி நினைத்துப் பார்க்கவே உங்களால் முடியவில்லையே!
தமிழரின் சமயங் குறித்தும் தமிழின் பெருமை குறித்தும் விழிப்பை உண்டாக்கியவர்களும் அதை இயக்கமாக்கியவர்களும் முதற் கட்டத்தில் மறைமலை அடிகளும், பிற்கட்டத்தில் தேவநேயப� �� பாவாணரும்தானே!
கொழுத்த பணத்தில் புரள்கிற ஆதீனங்கள் இவர்களையாவது ஆதரித்துப் புரந்ததுண்டா?
தமிழ்நாட்டை மராத்தியர்களும் நாயக்கர்களும் ஆண்டபோது, தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்தித் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் நோக்கம் தெலுங்கரினின்றும், மராத்தியரினின்றும் தமிழ்ச் சமயத்தை வேறுபடுத்திக் காட்டுவதுதான்! அதனால்தான் தமிழர்க்கே உரிய முருகன் பாடுபொருளாக்கப்பட்டான்!
பெளத்தமும், சமணமும் துறவுதான் பரிநிருவாணத்திற்குரிய வழி என்று வற்புறுத்தியபோது, தமிழ் இளைஞர்கள் இளந்துறவிகளானார்கள்! அப்போது ஞானசம்பந்தர் "எதற்கு இந்த வறண்ட வாழ்க்கை? நீங்கள் இங்கே வாருங்கள்; சிரமமில்லாமல் மண்ணில் பெண்ணோடு நல்ல வண்ணம் வாழலாம்; மேலும் எங்கள் சிவனே பெண்ணோடுதான் இருக்கிறார்' என்று கவர்ச்சியூட்டி ஞானசம்பந்தர் மாற்று மதத்தினரை இழுத்தார்!
""பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது!
சமயத் தலைவர்கள் ஆதீனங்களில்லை; அவர்கள் மடங்களின் மேலாளர்கள்!
வள்ளலார் போன்றவர்களே சமுதாயத்தையே மாற்றி அமைக்க வந்தவர்கள்!
வள்ளலார் ஒரு கட்டத்தில் சைவத்திற்கு மாற்று நிலை எடுத்தார். அது முக்கியமில்லை. ""பசிநீக்கம்; உயிரிரக்கம்'' இரண்டையுமே தலையாய கொள்கையாகக் கொண்டார்!
பதவியால், பணத்தால், சாதியால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் நிலை போய், ""ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்'' என்றார் பசியை நீக்குவதற்கு அணையாத தீயை அடுப்பில் மூட்டிய வள்ளற்பெருமான்!
இவ்வளவு சிறந்த வள்ளலாருக்கு சிவபெருமான் கனவில் வந்து எதுவும் சொல்லவில்லை. ""நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராச நிபுண மணி விளக்கே'' என்றுதான் பாடுகிறார்!
மகாத்மா காந்தி "வாய்மைதான் கடவுள்' என்று உய்த்துணர்ந்து சொன்னதற்குக் காரணம் இறைவன் அவருக்கு நேரில் வராததுதான்!
நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வருவது நல்லதுதான் என்றாலும், அவர் வந்ததை உயர் நீதிமன்றம் விசாரித்து அறியுமாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வ� �க்கறிஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்!
மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம் என்று கிளம்பி விட்டார்கள். ரியல் எஸ்டேட் விலை ஏறி விட்டதுதான் காரணம்!
பாண்டியர்கள் தாய் மீனாட்சிக்கு அளித்த சீதனம் அது! எல்லாம் அறிந்தவன் நீ; எல்லாம் வல்லவன் நீ சொக்கா! கடைசியில் உன் மடியிலேயே கை வைத்து விட்டார்கள்!
ஆட்டத்தை நிறுத்து சொக்கா!
உன் ஆட்டத்தை அல்ல;
ஆடக் கூடாதவர்களின் ஆட்டத்தை!
""பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது!
(பழ. கருப்பையா சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர். அதிமுக சட்டமன்ற உறு� ��்பினராக தற்போது இருக்கிறார்)
நன்றி: தினமணி