சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை
ஓசூர், செப். 28-
இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று பலத்த மழை கொட்டத் தொடங்கியது. பலத்த சூறைக் காற்றுடன் இடி,மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் இடைப்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்தன .மேலும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த திடீர் மழையால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
மாவட்ட உழவர் சங்க பிரதிநிதி பில்லுக்குறிச்சி நடேசன் கூறியதாவது:-
வறண்டு கிடந்த இப்பகுதிக்கு இந்த மழை ஓர் அரிய பரிசாக இருந்தது. என்றாலும் தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்தால் மட்டுமே மிகவும் வறண்டு போன இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த மழையால் விவசாயப் பணிகள் மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார். நாமக்கல்லில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல்லில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதியில் நீண்ட காலமாக மழை பொழியவில்லை. அத்துடன் பருவ மழையும் பொய்த்து விட்டதால், பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாய தொழிலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் வற்றிப் போய்விட்டன.
இந்த நிலை நீடித்தால், தண்ணீர் பிரச்சினை மிகப்பெரிய அளவில் பொதுமக்களை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில், மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல, இடி, மின்னலுடன் பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளிலிருந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 11 மணி வரை தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் இவ்வாறே தொடர்ந்து நாள்தோறும் மழை பொழிய வேண்டும், தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டனர்.
Post a Comment