Monday, 18 February 2013
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதிகட்ட போர் நடந்தது. அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மூத்த மகன் மற்றும் மகள் மற்றும் இளைய மகன் பாலசந்திரன் ஆகிய அனைவரும் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும், இறுதிகட்ட போரின் போது, 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர். பிடித்து செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டனர்.
இலங்கை ராணுவத்தின் கொடூர தாண்டவங்களை தொகுத்து இங்கிலாந்தின் ‘சானல் 4’ என்ற டி.வி. ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டது. இது உலகம் முழுவதும் மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்தது. ‘கிராபிக்ஸ்’ செய்து மிகைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.
இறுதிகட்ட போர் முடிவின்போது பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலசந்திரன் சுட்டுகொல்லப்பட்ட படம் வெளியாகி இருந்தது. ஆனால் அவன் எப்படி இறந்தான் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அவனை பிணைக் கைதியாக பிடித்து சென்ற சிங்கள ராணுவம் ஈவு இரக்கமின்றி 5 தடவை மார்பில் துப்பாக்கியில் சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அதற்கான போட்டோக்களை ஆதாரத்துடன் ‘சானல் 4’ டி.வி. நேற்று வெளியிட்டது.
பிணைக் கைதியாகும் முன்பு பாலச்சந்திரனுக்கு 5 விடுதலைப்புலிகள் காவலாக இருந்துள்ளனர். பாலச்சந்திரனுடன் சேர்ந்து அவர்களையும் இலங்கை ராணுவம் பிடித்து சென்றுள்ளது. பின்னர் விடுதலைப்புலிகள் 5 பேரின் கைகளை கட்டி தலையில் சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர்.
பின்னர் பாலசந்திரனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவில் உட்கார வைத்தனர். சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திய நிலையில் காயங்களுடன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பாலசந்திரனுக்கு சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பாலசந்திரனை ராணுவ வீரர்கள் டிஜிட்டல் காமிராவில் போட்டோ எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் 2 மணி நேரம் கழித்து பாலசந்திரனை கொடூரமாக சுட்டு கொன்றுள்ளனர். அதையும் அதே டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்துள்ளனர். பிணமாக கிடக்கும் பாலசந்திரனின் மார்பில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. அவனை 2 அடி தூரத்தில் இருந்தே சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பார் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
prabhakaran son shot killed srilanka army channel 4 release
அதே நேரத்தில் அவரின் பாதுகாவலர்கள் அவரது கண் முன்னாலே சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள ‘சானல் 4’ பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொடூரமாக சொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ‘நோ வார் ஷோன்’ என்ற பெயரில் விரைவில் புதிய ஆவணபடம் ஒன்றையும் சானல் 4 வெளியிட உள்ளது. ஏற்கனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது அமெரிக்கா கொண்டு வந்த போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு சிக்கலில் உள்ளது.
இந்த நிலையில் சானல் 4 தற்போது வெளியிட்டுள்ள பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனின் போட்டோக்கள் மற்றும் வெளியாக இருக்கும் சானல் 4 ஆவணப்படம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அதிபர் ராஜபக்சேவும் அவரது தம்பியும் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவும் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.