Tuesday, 29 November 2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைபட்டு மீண்டுள்ள கனிமொழிக்கு திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பதவி தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி கடந்த மேமாதம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்ட கனிமொழி 6 மாத காலம் திகார் சிறையில் அடைபட்டிருந்தார். அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை மாலை ஜாமீன் வாழங்கியது. இந்த நிலையில் விரைவில் சென்னை வர உள்ள கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறுபடியும் ஆற்காட்டார் தியாகியாகிறார்?
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தற்போது திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் அவருக்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
ஆற்காடு வீராசாமி வகித்து வரும் அந்த பதவியை அவர் விட்டுத்தர முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தான் வகித்து வந்த பொருளாளர் பதவியை மு.க ஸ்டாலினுக்காக விட்டுக்கொடுத்தார் ஆற்காடு வீராசாமி என்பது நினைவிருக்கலாம். இப்போது கருணாநிதி மகளுக்காகவும் தனது பதவியை விட்டுத் தருகிறார் ஆற்காட்டார். இதன் மூலம் அவரும் ஒரு தியாகியாகிறார்!
இதைப்போல துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் சற்குணபாண்டியனும் தன் பதவியைக் கனிமொழிக்கு அளிக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்று கனிமொழிக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
அதேசமயம் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு அளித்து, அவரை தமிழகம் முழுவதும் கனிமொழியைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்யவும் ஒரு பிரிவு கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
அனைவரும் சம்மதம்
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த செய்தி அறிந்தவுடன் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் கனிமொழிக்கு பதவி தரவேண்டியது அவசியம் என கூறப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்பட அனைவரும் சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.
சந்தடி சாக்கில் பதவி கேட்கும் ஸ்டாலின்
இதற்கிடையில் மு.க.ஸ்டாலினும் தனக்குச் இந்த முறையாவது செயல் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைவர் பதவிக்காக அவர் நீண்ட காலமாக காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு செயல் தலைவர் பதவியைக் கொடுத்து பின்னர் தலைவராக்கலாம் என மூத்த தலைவர்கள் கருதுவதாகத்தெரிகிறது. மேலும் அழகிரியும் ஒருபக்கம் மல்லுக்கட்டி வருவதால் ஸ்டாலினுக்கு அது கூட கிடைக்க முடியாத நிலை நிலவுகிறது.
தற்போது கனிமொழியை ஜாமீ்னில் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வந்தார் ஸ்டாலின் என்பதால் இந்த முறை அவருக்குப் பதவியைக் கொடுத்து கட்சித் தலைமை குஷிப்படுத்த முயற்சிக்லாம் என்று தெரிகிறது.
திமுக பொதுக்குழு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் கூடும்போது கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பதவி அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.