News Update :
Powered by Blogger.

வங்கியில் கொள்ளையடித்தது பீகார் வாலிபர்களா?

Penulis : karthik on Wednesday 25 January 2012 | 19:44

Wednesday 25 January 2012

பெருங்குடி வங்கியில் துப்பாக்கிமுனையில் நடந்த கொள்ளையில் பீகார்
வாலிபர்கள் ஈடுபட்டார்களா என்று 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
சென்னை பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஒருகட்டிடத்தின் முதல்
மாடியில் பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. கீழ் தளத்தில் கட்டிட
உரிமையாளர் பெனாராம் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். முதல்
மாடிக்குச்செல்லும் நுழைவு வாயிலில் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த
ஏடிஎம் மையத்துக்கு மட்டும் செக்யூரிட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் போல
வந்த 4 மர்ம ஆசாமிகள், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களை
துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து
சென்றனர். ஊழியர்கள், பொதுமக்கள் என்று யாரையும் வெளியே விடாமல்
வங்கிக்குள் வைத்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் இந்தி கலந்த தமிழில் பேசியுள்ளனர். அவர்களுக்கு வங்கி
பற்றிய முழு விவரமும் தெரிந்துள்ளது. இதனால்,இந்த வங்கிக்கு அடிக்கடி
கொள்ளையர்கள் வந்து, பார்த்த பிறகுதான் கொள்ளையடித்துள்ளனர். வங்கியில்
சிசிடிவி கேமரா இல்லை. அதனால் வந்தவர்கள் பற்றிய விவரம் அவர்களிடம்
இல்லை. வங்கிக்கு செக்யூரிட்டியும் இல்லை. இதனால்கொள்ளையர்கள் பற்றிய
எந்த விவரமும் ஊழியர்களுக்கு தெரியவில்லை.
ஆனால், வங்கி ஊழியர்களுக்கு 4 பேர் சமைத்து கொடுக்கின்றனர். அவர்கள்
மூலம் கொள்ளையர்கள் வங்கி பற்றிய தகவல்களை
தெரிந்துகொள்ளையடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களிடம்
விசாரணை நடத்துகின்றனர். அதோடு பெருங்குடி, துரைப்பாக்கம், நீலாங்கரை,
சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக தங்கியுள்ளனர். அதனால் அவர்கள் யாராவது கொள்ளையடித்துள்ளார்களா
என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில்
பல வீடுகளில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டன. 500க்கும்
மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது.
இதில், இந்தி பேசும் சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து
வருகின்றனர். ஆனால், கொள்ளையர்கள் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.
சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது.
ஆனால் கொள்ளையர்கள் தைரியமாக துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
பீகார், உ.பி போன்ற மாநிலங்களில் எளிதாக குறைந்த விலைக்கு துப்பாக்கி
கிடைக்கும்.
இதனால் அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து வந்து வடமாநில வாலிபர்கள்
கொள்ளையடித்திருக்கலாம். சம்பவம் நடந்தவுடன், சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வாகன
சோதனையும் நடத்தப்பட்டது. எனினும் யாரும் பிடிபடவில்லை. கொள்ளையர்களை
பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடித்த போது அங்கு இருந்தவர்களின்
செல்போன்களை பறித்துச்சென்றனர். அவர்கள் பறித்துச்சென்ற செல்போன் எண்களை
சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகபர்சாலி தலைமையில் போலீசார்
கண்காணித்து வருகிறார்கள்.
ஆனால் நேற்று மாலை வரை 5 செல்போன்களும் இயக்கப்படாமல் சுவிட்ச் ஆப்
செய்யப்பட்டிருந்தன. இதனால் கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைக்கவில்லை.
கொள்ளையர்கள் 2 துப்பாக்கி வைத்துள்ளனர். அதனால் தனிப்படை போலீசார்
பிடிக்கும்போது, அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் தாக்குதல்
நடத்தலாம்.
இதனால் தனிப்படை போலீசார் ஆயுதத்துடன் தான் செல்ல வேண்டும். உயிருக்கு
ஆபத்து ஏற்படும் பட்சத்தில் தேவைப்பட்டால் கொள்ளையர்களை சுட்டுப்
பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கொள்ளையர்கள்
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள்
வைத்துள்ளதால், அவர்களை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது'
என்றார்.
comments | | Read More...

ப்ளஸ் 2 : செய்முறைத் தேர்வு தள்ளிவைப்பு »

கடலூர் மாவட்டத்தில் 'தானே' புயல் பாதிப்பு காரணமாக, ப்ளஸ் 2 செய்முறைத்
தேர்வை 6 நாட்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்
தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ப்ளஸ்
2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 9.63 லட்சம் பேர்
எழுத உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் பேர் எழுத
உள்ளனர்.
ப்ளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி2 முதல் 20 வரை
நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத்
தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மாணவர்களைமுழுமையாகத்
தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் செய்முறைத் தேர்வை தள்ளிவைக்க
வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று கடலூர்
மாவட்டத்தில் மட்டும் ப்ளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 8 முதல் 25 வரை
நடத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்சார இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதோடு, பள்ளிகளில்
வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டன.
அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் பாதிப்பு காரணமாக
பள்ளிகள் ஜனவரி 19-ம் தேதிதான் திறக்கப்பட்டன.
குடியிருப்புகள், பள்ளிகளுக்குமுன்னுரிமை வழங்கி மின் இணைப்புகள்
வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் ஜனவரி
29-க்குள் சீரடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு
வழங்கப்படவில்லை. அந்தப் பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
இந்தப் பகுதிகளுக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மின் இணைப்பு
வழங்கப்பட்டுவிடும். இருந்தாலும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு மின்
இணைப்பு அவசியம் என்பதால், அந்தமாவட்ட அதிகாரிகள் தேர்வைத்
தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
முன்னெச்சரிக்கை அடிப்படையில் விடப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசுத்
தேர்வுகள் இயக்ககம் செய்முறைத் தேர்வுகளை6 நாள்கள் தள்ளிவைத்துள்ளது.
செய்முறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் அந்த மாவட்டத்தில் எழுத்துத்
தேர்வுதேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
comments | | Read More...

அனீமியா என்னும் இரத்தசோகை நோய்

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பிரதம
மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம்
ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது
ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம்
சாப்பிடவும்உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும்
வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண்
குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா?
UNICEF நிறுவனம்நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46%
பெண் குழந்தைகள் இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று
தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த
நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு
வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து
பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள்என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு
அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள்
இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது
ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார
நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு
12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்த சோகை நோய் என்பது என்ன?
நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து
தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண
வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:
HB % அதிக பட்சம்….. 14.08 gm%
ஆண்கள ……………………… 13.00 gm %
பெண்கள் ……………………… 11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் …………… 10.00 gm %
குழந்தைகள் …………………….. . 12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் … 12.00 gm %
முதியோர்கள்……………………….10.00 gm %
இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும்.
நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் அதிக அளவில் பெண்கள்
பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம்
செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது
கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு
ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த
சோகைக்கு ஆளாகவும் காரணம்.
இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத
நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி
இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49)
இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள்.கர்நாடகத்தில்
மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம்
மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது.
மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காகசாப்பாட்டை
குறைப்பதும், பசி வேளையில் "ஜங்க் பூட்" (junk food) என்று சொல்லப்படும்
சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை
கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது.
அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.
இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும்,
உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான
சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்" (junk food) சாப்பிடுவது
அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன்
புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த
சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை
அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும்
குழந்தைகளையும் பாதிக்கிறது.
இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும்.
இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம்
பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.
இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:
பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள்
மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை,
முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின்
இரத்தத்தில் உண்டாக உதவும்.
இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது
சாத்துக்குடிசாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல்
உறிஞ்ச உதவுகின்றன.
பெண்களின் ஆரோக்கியம் பாது காக்கப் படக் கூடிய ஒன்று. சமுதாயம் மேம்பட
ஆரோக்கியமான குழந்தைகள் தேவை. இதை ஒவ்வொரு பெண்ணும் ஆணும் உணர்ந்து
நடந்து கொண்டால் ஆரோக்கியமான சமுதாயத்தை, உடல், உளம் நலமிக்க எதிர் கால
இந்தியாவை உருவாக்கலாம்.
-
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger