Thursday, 25 July 2013
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் பாராட்டும்படி அமைந்தது. கேப்டன் கோலியின் சதமும், அறிமுக வீரர் அம்பத்தி ராயுடுவின் அரைசதமும் வெற்றியை சுலபமாக்கியது.
ஹராரே மைதானத்தில் பொதுவாக காலைப்பொழுதில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும். அதாவது பந்து நன்கு பவுன்சும், ஸ்விங்கும் ஆகும். இதனால் தான், இரண்டு அணியின் கேப்டன்களும் இங்கு விளையாடும் போது டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டனர். அதாவது டாஸ் வெல்லும் அணி சந்தேகத்திற்கு இடமின்றி முதலில் பந்து வீச்சை தான் தேர்வு செய்யும். கடைசியாக இங்கு நடந்த 15 ஆட்டங்களில் 12-ல் இரண்டாவது பேட் செய்த அணியே வெற்றி கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அனேகமாக இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது. இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் நமது இளம் படை ஆயத்தமாக இருக்கிறது.
ஜிம்பாப்வே முதல் ஆட்டத்தில் 50 ஓவர்களை முழுமையாக சமாளித்ததே பெரிய விஷயம். சிகந்தர் ராசா (82 ரன்), சிகும்புரா (43 ரன்) தவிர வேறு யாரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. ஆனால் இந்த முறை துரிதமாக ரன்கள் எடுக்க முயற்சிப்பார்கள். அதே சமயம் எந்த காரணத்தை கொண்டும் ஜிம்பாப்வேயை சாதாரணமாக கருதக்கூடாது என்பதில் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, உனட்கட், ஷமி அகமது, வினய்குமார்.
ஜிம்பாப்வே: சிபாண்டா, சிகந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், மசகட்சா, பிரன்டன் டெய்லர் (கேப்டன்), மால்கம் வாலர், சிகும்புரா, முதோம்போட்சி, உத்செயா, ஜார்விஸ், சதரா அல்லது பிரையன் விடோரி.
இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் டென் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்திய வீரர் 27 வயதான அம்பத்தி ராயுடு, ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். தனது முதல் ஆட்டத்திலேயே 63 ரன்கள் விளாசி அசத்திய அவர், இறுதியில் வெற்றிக்கான ரன்னையும் அடித்து பிரமாதப்படுத்தினார். இதன் மூலம் அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே அரைசதம் அடித்த 11-வது இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
வெற்றிக்கு பிறகு ஆந்திராவைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
அறிமுக போட்டியிலேயே சிறப்பாக ஆடியது அற்புதமான உணர்வை தருகிறது. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும். இந்திய அணிக்காக என்றாவது ஒரு நாள் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு. இப்போது அது நனவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இது எனது முதல் சர்வதேச போட்டி என்பதற்காக நான் அதிகமாக பதற்றமடையவில்லை. ஆனால் அதை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு நாள் கிரிக்கெட்டில், இப்போது உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி விளங்குகிறார். அவருடன் இணைந்து விளையாடியது சிறப்பான விஷயம். அவர் விளையாடிய விதம் களத்தில் எனது நெருக்கடியை குறைத்து, எளிதாக ஆட உதவியது. இந்த இன்னிங்சில் அவர் எப்படி நிலைத்து நின்று ஆடினார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு கிடைத்த நல்ல அனுபவம் இதுவாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினேன். அப்போது சச்சின் தெண்டுல்கரும், அந்த அணியின் பயிற்சியாளர் ராபின்சிங்கும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி, உதவிகரமாக இருந்தனர். இந்த தருணத்தில் அவர்களுக்கும், எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ராயுடு கூறினார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) போட்டியில் விளையாடியவர் அம்பத்தி ராயுடு. முதலில், ஐ.சி.எல்.-ல் விளையாடிய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பிறகு அந்த போட்டியில் விளையாடிய அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு வழங்கி ஏற்றுக் கொண்டது. ஐ.சி.எல். போட்டியில் பங்கேற்ற வீரர்களில் ஒருவர், இந்திய அணிக்காக களம் இறங்கியது இது தான் முதல் முறையாகும்.