Wednesday, 28 December 2011
புத்தாண்டு தின கேளிக்கை மற்றும் விருந்துகளில் பங்கேற்கவும், ஆண்டு இறுதி விடுமுறையை எடுக்கவும், பரிசுப் பொருட்கள் வாங்கவும் அமைச்சர்களுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுவாக, தொடர்ந்து உழைக்கும் மனநிலை உடையவர். இதே போல, தன் அமைச்சரவை சகாக்களும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். பஞ்சாயத்து துறை அமைச்சராக இருந்த சந்திரநாத் சிங்கின் செயல்பாடு திருப்தி அளிக்காததால், அவரை திட்ட அமலாக்கத் துறைக்கு மாற்றினார்.
புத்தாண்டையொட்டி, பல்வேறு தரப்பில் ஏற்பாடு செய்யப்படும் கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கும்படி, அவர் தனது கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வாய்மொழியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ஆண்டு இறுதியில் கிடைக்கும் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளவும், அவர் தடை விதித்துள்ளார்.
"பதவியில் உள்ளவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களில் அவசியம் பங்கேற்க நேர்ந்தால், அடையாளத்துக்காக அங்கு சென்று விட்டு, உடனே கிளம்பிவிட வேண்டும். அங்கு நடக்கும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு கூத்தடிக்கக் கூடாது. கான்ட்ராக்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் தரும் விலை உயர்ந்த பரிசுகளை வாங்கக் கூடாது' என தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி குறிப்பிடுகையில், "எங்கள் துறை சார்ந்த பணிகள் நிறைய உள்ளதால், விடுமுறை எடுப்பதற்கான சாத்தியமே இல்லை' என்றார்.