Sunday, 6 November 2011
குழந்தைகள் சத்துக் குறைபாடு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் விளம்பரப் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய்களிலும் அவர்கள் சிக்கியுள்ளார்கள். எனவே மக்கள் மத்தியில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக விளம்பரபடங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த விளம்பரப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதி சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகினர். விஷயத்தைக் கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி.
இந்தப் படம் தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவும் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் அமீர்கானும் இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.
வரும் நாட்களில் நாடு முழுவதும் ரஜினி, அமீர்கான் உருவப் படங்களுடன் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் வைக்கப்பட உள்ளன.
இது சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் பிரசாரக் கூட்டங்களிலும் இருவரும் பங்கேற்றுப் பேச உள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வணிக விளம்பரங்களில் நடிக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஆனால் சமூக நலனுக்காக ஏற்கனவே போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் நடித்தார். அந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உடல் நலம் பெற்று புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினி, பெரிய அளவில் சமூகப் பணிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக குழந்தைகள் நலன் தொடர்பான இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் இறங்குகிறார் என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.