சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்
பள்ளி மைதானத்தில் 35- வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கண்காட்சி அரங்கம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தினமும்
மாலையில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று அறிவு சார்ந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்
கலந்து கொண்டு சிறப்புரை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் புத்தக கண்காட்சி நடைபெற்ற வளாகம் முழுவதும் பள்ளி , கல்லூரி
மாணவர்கள் , அவர்களின் பெற்றோர்கள் என கூட்டம் அலைமோதியது. அவர்கள்
மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேசியதாவது:-
முதலில் எல்லோரும் , ` தங்கள் வீட்டில் குறைந்த பட்சம் 20 நல்ல
புத்தகங்களை கொண்ட சிறு நூலகத்தை அமைப்போம் ' என்ற உறுதி மொழியை
எடுத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது அறிவு புரட்சிக்கு
ஆதாரமாக அமையும். நல்ல புத்தகங்கள் அறிவூட்டும். நல்ல வழியில் நடத்தும்.
பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு நல்ல
புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். எனக்கு புத்தகங்களை
படிக்கும் ஆர்வத்தை தூண்டியவர்கள் என்னுடைய அண்ணனும் , அவரது நண்பரும்
தான். எனக்கு 10 வயது இருக்கும் போது என் அண்ணனுடன் , அவரது நண்பரின்
வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவர் வீட்டில் ஒரு நூலகத்தை
வைத்திருந்தார்.
அங்கிருந்த புத்தகங்களை படித்து பார்த்தேன். என் அண்ணனின் நண்பர்
என்னிடம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களை வழங்கினார். அப்போது தான்
என்னுடைய படிக்கும் ஆர்வம் அதிகரித்தது.கற்ற நூலின் அளவிற்கு ஏற்ப அறிவு
வளரும். வளமான வாழ்விற்கு இருப்பது புத்தகம் தான். நான் சமீபத்தில் 2
புத்தகங்களை படித்தேன். ஒன்றுவிவசாயத்தை பற்றியது , மற்றொன்று
செயற்கைகோள் மூலம் நதிகளை ஆராயும் புத்தகம் ஒன்று.
விவசாயம் சார்ந்த அந்த புத்தகத்தில் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை
பெருக்குவதற்கான முறைகள் , நவீன விவசாயம் மூலம் உற்பத்தியை பெருக்குவது
என்று விவசாயத்தின் பெருமையை அந்த புத்தகம் விளக்கியிருந்தது.
' செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள் ' என்ற புத்தகத்தில் நதிகளின்
பிறப்பும் , வாழ்வும் , அவைகள் கடந்து செல்லும் பாதைகள் , சமவெளி
பகுதிகள் , கடலோர பகுதிகள் , கடலுக்குள் நிகழும் மாற்றம் , பூமிக்கடியில்
நிகழும் மாற்றம் , பூமியின் நகரும் தன்மை போன்றவற்றை இந்த புத்தகத்தில்
விளக்கி கூறியிருக்கிறார்கள்.
நதிகளை பற்றி எதிர்கால சந்ததியினர் அவசியம் தெரிந்து கொள்ள இந்த
புத்தகத்தை படிக்க வேண்டும்.நதிகள் நம்மோடு ஒன்றியிருக்கிறது.
தமிழகத்தில்நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம்
நம்பியிருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் நீர்வழிச்சாலைகளை
ஏற்படுத்தினால் ஆண்டிற்கு 100 டி.எம்.சி. தண்ணீரை நாம் சேமிக்கமுடியும்.
ஆகவே நதிகள் இணைப்பில் தொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு உலக வங்கியுடன் உதவியுடனும் மற்ற தனியார் நிறுவனத்துடனும்
இணைந்து தமிழகநதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான்
தமிழகம் வளம் கொழிக்கும். வளமானமாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். நதிகள்
இணைப்பு என்ற அந்த கனவு எனக்கும் இருக்கிறது , அரசுக்கும் இருக்கிறது.
கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. நம்மைதூங்க விடாமல் வருவது தான்
கனவு.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் , அப்துல் கலாம் பேசி முடித்த பிறகு , ` முல்லைப் பெரியாறு
அணை பிரச்சினை தீர்வுக்கு உங்கள் யோசனை என்ன ?' என்று நிருபர்கள்
கேட்டனர். அதற்கு அப்துல் கலாம் , ` தமிழக-கேரள முதல்-மந்திரிகள்
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு ஏற்படும் ' என்று கூறினார்.