Saturday, 18 February 2012
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் உடல்நிலை மோசமடைய சாமியாரும், மருத்துவர் ஒருவரும் அளித்த அறிவுரைதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியி்ல் மிடில் ஆர்டர் பேட்ஸமேனாக ஜொலித்தவர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்த யுவராஜ் சிங், தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது உடல்நலம் இந்த அளவுக்கு மோசமடைய ஒரு டாக்டரும், சாமியாரும் தான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சண்டிகரில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
யுவராஜ் சிங்கை சுற்றி இருப்பவர்கள் அவரது நன்மையை விரும்பாதவர்கள். அவர்களால் தான் யுவராஜ் சிங், அமெரிக்க சென்று சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
யுவராஜ் சிங்கின் காரில் இருந்த சில ஆவணங்களை திருடிய சாமியார் ஒருவர், எல்லாம் தானாக சரியாகிவிடும் என்று தெரிவித்தார். யுவராஜ் சிங்கிற்கு சிகிச்சை அளித்து வந்த டெல்லியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர், நோய் தானாக சரியாகிவிடும் என்று கூறினார்.
இதனால் என்னையும், மருத்துவத்தையும், மற்ற அனைவரும் கூறிய அறிவுரைகளை யுவராஜ் சிங் மதிக்கவில்லை. மருத்துவ சிகிச்சையின் மூலம் நோய்க்கு தீர்வு காணுமாறு யுவராஜ் சிங்கிற்கு அறிவுரை கூறினேன். ஆனால் யுவராஜ் சிங் அதனை பொருட்படுத்தவில்லை.
இதன்மூலம் 2 பேரும் சேர்ந்து யுவராஜ் சிங்கை அமெரிக்கா செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுமாறு யுவராஜ் சிங்கிடம் கெஞ்சி கேட்ட பிறகு அதற்கு சம்மதித்து சென்றார். இதனால் 6 மாதங்கள் சிகிச்சைக்கு தாமதமானது. யுவராஜ் சிங்கின் நிலைக்கு யாரையும் நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால் உண்மை நிலையை சொல்கிறேன்.
சிகிச்சை முடித்து இந்தியா திரும்பியவுடன் யுவராஜ் சிங், பொற்கோவிலுக்கு சென்று வழிப்பட வேண்டும். அப்போது தான் அவரை சுற்றிலும் உள்ள தேவையற்ற மக்களிடம் இருந்து விடுபட முடியும். நாம் மேலே பறக்கும் போது நம்மை சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பது நம்மால் தெரிந்து கொள்ள முடியாது என்பது யுவராஜ் சிங்கிற்கு தற்போது புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
இவ்வாறு யோகராஜ் தெரிவித்தார்.
யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டிய மருத்துவரும், சாமியாரும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.