News Update :
Powered by Blogger.

கூடங்குளம் விவகாரம்: மத்திய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

Penulis : karthik on Tuesday 1 November 2011 | 23:32

Tuesday 1 November 2011

""கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து, மக்களிடம் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, சிக்கலை மேலும் வலுவடையச் செய்யும் பணியில், மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தக்கோரி, அப்பகுதி மக்கள் இரண்டு மாதங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் அங்கு சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்தேன். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, மத்திய அரசு இப்பிரச்னையை உடனடியாகத் தீர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டேன். மக்களின் அச்சம் தீரும் வரை, அணுமின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும், பிரதமரை அனைத்துக் கட்சியினரும், போராட்டக் குழுவினரும் சந்திப்பது எனவும், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதன்பிறகு, இப்பிரச்னை குறித்து மக்களிடம் விவாதிப்பதற்காக, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. போராட்டக் குழுவினர் இக்குழுவை ஏற்கவில்லை. இதற்கிடையில், அணுமின் நிலையப் பராமரிப்புப் பணிக்காகச் செல்லும் ஊழியர்களை, போராட்டக் குழுவினர் தடுப்பதாகவும், அமைதியாகப் போராட்டம் நடத்துவதாகக் கூறிவிட்டு, வன்முறை உருவாகும் சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர் எனவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். போராட்டம் வேறு திசைக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்தே, மத்திய அரசு இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இதை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாற்றி, போராட்டத்தை ஒடுக்க, அடக்கு முறையைக் கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்களிடம் பேசி, பிரச்னையைத் தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை, மேலும், மேலும் வலுவடையச் செய்யும் பணியில், மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த பிரச்னையைத் தீர்க்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger