தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டை தீர்க்க வேண்டிய நிலையில் உள்ள முதல்வர் ஜெயலலிதா, ஏதோ வேறு மாநிலப் பிரச்சினை போல இதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக ஒரு மணி அல்லது இரண்டு மணி நேர மின்வெட்டு என்பதே தாங்க முடியாத எதிர் விளைவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடியது. அதுவும் மாணவர்களின் பரீட்சை நேரத்தில், 8 மணி நேர மின்வெட்டு என்பது எந்த அளவு மோசமாக மக்களை பாதிக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் விவசாயப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
நியாயமாக இந்தப் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் அல்லவா பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்?
'மோடியிடம் வாங்குகிறோம், ஆந்திராவில் வாங்கப் போகிறோம்... மகாராஷ்ட்ராவுடன் பேசுகிறோம்' என்றெல்லாம் ஆட்சிக்கு வந்த முதல் மாதம் மட்டும் அறிக்கை விட்ட ஜெயலலிதா, பின்னர் அப்படி யு டர்ன் அடித்து அமைதியாகிவிட்டார்.
மின் வெட்டு பற்றி குறைந்தபட்சம் பேசக் கூட அவர் தயாராக இல்லை.
இன்னொரு பக்கம் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலை. இந்தப் போராட்டத்துக்கு மக்களிடம் பெருகும் ஆதரவுதான் மத்திய மாநில அரசுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு இது பெரிய இக்கட்டு. போராட்டத்தை ஆதரிக்கவும் முடியாது... மக்களே நடத்தும் அந்தப் போராட்டத்தை நசுக்கவும் வழியில்லை.
அணு உலைக்கு ஆதரவாக, கல்பாக்கம் விஷயத்தை ஒரு நாளைக்கு இருபது முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இந் நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிதான் இந்த மின்வெட்டு என்று நடுநிலையாளர்கள் பலரும் உறுதியாக நம்புகிறார்கள்.
இப்படியே தொடர்ந்து மின்வெட்டு நேரத்தை அதிகரித்து கொண்டு போவதின் மூலம் மக்களுக்கு கூடங்குளம் போராட்டக்காரர்களின் மீது தவிர்க்கமுடியாத ஒரு கோபத்தை கொண்டுவர முடியும் என்பது மத்திய மாநில அரசுகளின் எண்ணமாக இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட துவங்கினால் மின் தட்டுபாடு இருக்காதே என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்குவதும். அதன் மூலம் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்பாளர்களை செயலிழக்க செய்வதுமே இவர்களின் திட்டமாக இருக்கும் என்று நம்பபடுகிறது.
'இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் இரண்டுமே கைகோர்த்துச் செயல்படுகின்றன. கரண்ட் இல்ல... நாங்க என்ன பண்ணட்டும் என்று சொல்ல ஒரு மாநில நிர்வாகம் எதற்கு? உண்மையான அக்கறை இருந்தால், மின்சாரம் தரத் தயாராக உள்ள குஜராத் முதல்வர் மோடியிடம் 900 மெகாவாட்டை வாங்கியிருக்கலாமே... ஆனால் ஜெயலலிதா அதை வசதியாக மறந்துவிட்டார். மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக மின்வெட்டு நேரத்தை அதிகரித்துக் கொண்டே போவதுதான் திட்டம். கரண்ட் இல்லாத இந்த நேரத்துல கூடங்குளம் கரண்ட் கிடைச்சா நல்லதுதானே... அதை ஏன் தடுக்கணும்' என்று சொல்ல வைப்பதுதான் நோக்கம் என்கிறார்கள் நடப்பதை உற்று கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள்.
கூடங்குளம் விஷயத்தில் தேசத்துக்கும் மக்களுக்கும் சாதகமான ஒரு தீர்வு எட்டப்படுவது மிக முக்கியம். அதே நேரத்தில், தமிழக மின்வெட்டை சமாளிக்க அவசர கால நடவடிக்கைகளும் மிக மிக அவசியம்.
Post a Comment