News Update :
Powered by Blogger.

முள்ளிவாய்க்காலைப் போல எங்களைக் கொல்லப் போகிறீர்களா?... உதயக்குமார் கேள்வி!

Penulis : karthik on Thursday 22 March 2012 | 10:30

Thursday 22 March 2012

 
 
 
கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. முள்ளிவாய்க்காலில் தமிழர்களை குண்டு போட்டுக் கொன்றதைப் போல எங்களையும் கொல்லத் திட்டமிடுகிறார்களா என்று தெரியவில்லை என்று அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை அடுத்து அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
 
இந்த நிலையில் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. அவருடன் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
 
பதற்றம் நீடிப்பு
 
உதயகுமார் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், தன்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்று கூறியுள்ளார். தான் கைது செய்யப்படுவதைக் கண்டு பயப்படவில்லை என்றும் அரசுப் பணத்தை நான் திருடவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. பின்னர் ஏன் நான் பயப்பட வேண்டும் என்றார்.
 
அடிப்படை வசதிகள் நிறுத்தம்
 
இடிந்தகரையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டிய உதயகுமார், உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் சுகாதார வசதிகள் இன்றி தவிப்பதாக கூறினார். முள்ளிவாய்க்கால் சம்பவம் போல இடிந்தகரையில் உள்ள தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய இந்த அரசுகள் முடிவு செய்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
சிறையில் அடைப்பு
 
இதனிடையே அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்ட 156 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 42 பெண்கள் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மத்திய பெண்கள் சிறையிலும், 114 ஆண்கள் திருச்சி மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
 
தொடர்ந்து இடிந்தகரையில் பதட்டமும், பரபரப்பும் நீடிக்கிறது.



comments | | Read More...

இதெல்லாம் ஒரு தோல்வியா?... விஜயகாந்த் பேச்சு!

 
 
இடைத் தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு சடங்காக மாறி விட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 முறை இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியுற்றது. எனவே சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தது. இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பண பலத்தைப் பிரயோகித்து இந்தத் தேர்தலை சந்தித்தது ஆளும் கட்சியான அதிமுக.
 
இந்தத் தேர்தலே உழைப்பிற்கும், பண பலத்திற்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. அதில் பண பலம் வென்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்றில் கூட அதிமுக வென்றதில்லை.
 
பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், இடைத் தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை. மேலும் தமிழகத்தி்ல இடைத் தேர்தல் என்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
 
தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்போம், தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.



comments | | Read More...

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 3 மடங்கு அதிக ஓட்டுக்களை பெற்றது எப்படி?

 
 
 
சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சங்கரன் கோவில் தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சங்கரன்கோவில் தொகுதியில் 1957-ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தல் தொடங்கி தற்போது நடந்த தேர்தல் வரை 14 தேர்தல்களில் ஆரம்ப காலத்தில் மட்டும் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து அ.தி.மு.க. உருவாகாத கழகம் ஒன்றுபட்டு இருந்த போது தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. தோன்றிய பிறகு தி.மு.க. 2 முறையும் ஆக மொத்தம் 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
 
எம்.ஜி.ஆர். இருந்த போது 2 முறையும், ஜெயலலிதா தலைமை ஏற்ற பிறகு 6 முறையுமாக மொத்தம் 8 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிலும் ஜெயலலிதா தலைமை பொறுப்பு ஏற்ற பிறகு நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.
 
இதில் அ.தி.மு.க.வின் மறைந்த அமைச்சர் கருப்பசாமி மட்டும் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகபட்சமாக பெற்ற ஓட்டுகள் 70 ஆயிரத்து 297 தான். ஆனால் இப்போது போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 94 ஆயிரத்து 977 ஓட்டுக்கள் வாங்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
 
தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 61 ஆயிரத்து 902 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால் இப்போது 26 ஆயிரத்து 220 ஓட்டுக்களாக குறைந்து இருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட 35 ஆயிரம் ஓட்டுகள் குறைவு.
 
கடந்த தேர்தலில் கருப்பசாமி 11 ஆயிரத்து 395 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது முத்துச் செல்வி 68 ஆயிரத்து 757 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 5 மடங்கு அதிகம்.
 
1996-ல் ம.தி.மு.க. இந்த தொகுதியில் ஜனதா தளம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டபோது 30 ஆயிரத்து 893 ஓட்டுகள் பெற்றது. 2001-ல் 20 ஆயிரத்து 610 ஓட்டுகள் கிடைத்தது. இப்போது ம.தி.மு.க.வுக்கு 20 ஆயிரத்து 678 ஓட்டுகள் பெற்றுள்ளது.
 
தே.மு.தி.க.வுக்கு 12 ஆயிரத்து 144 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் தே.மு.தி.க. போட்டியிட வில்லை. அதற்கு முன்பு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் 5 ஆயிரத்து 531 ஓட்டுக்கள் பெற்றார். பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் 1,633 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது.தே.மு.தி.க. இதற்கு முன்பு பெற்றதை விட 6,613 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளது. என்றாலும் தனித்து போட்டியிட்டு அ.தி.மு.க.வுக்கு சவாலாக இருப்போம் என்று விஜயகாந்த் கூறி இருந்தார்.
 
ஆனால், தே.மு.தி.க. 4-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. இதற்கு முன்பு பெற்ற ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை பெற்று இருக்கிறோம் என்று அவர்கள் சொன்னாலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற முடிந்தது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது உண்மையாகி இருக்கிறது.
 
முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த கிராமமான புளியம் பட்டியில் 3 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அ.தி.மு.க.வுக்கே அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இங்கு அ.தி.மு.க. 10,984 ஓட்டுக்களும், தி.மு.க.வுக்கு 450 ஓட்டுக்களும் கிடைத்தன. தே.மு.தி.க.வுக்கு 218 ஓட்டுக்களையும், ம.தி.மு.க. 83 ஓட்டுக்களையும் பெற்றுள்ளன.
 
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. இங்கு அமைக்கப்பட்டிருந்த 3 ஓட்டுச்சாவடிகளில் ம.தி.மு.க. 1,158 வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 761 ஓட்டுக்களும், தி.மு.க.வுக்கு 110 ஓட்டுக்களும், தே.மு. தி.க.வுக்கு 42 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.
 
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, மின்வெட்டு என்று பல்வேறு பிரச்சினைகளைச் சொல்லி எதிர்க் கட்சிகள் ஓட்டு கேட்டன. ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரசாரம் செய்தார்.
 
அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சங்கரன்கோவில் மக்கள் சங்கடம் இல்லாமல் வாழ அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று கூறினார். அ.தி.மு.க.வுக்கு சோதனையான காலத்திலும் சங்கரன்கோவில் மக்கள் வாக்களித்தனர். எப்போதும் அ.தி.மு.க.வின் பக்கம் இருந்து சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 
மற்ற கட்சிகளை 'டெபாசிட்' இழக்கச் செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தின் போது கேட்டுக் கொண்டார். அது அப்படியே நிறைவேறி இருக்கிறது.
 
இதற்கு முதல்-அமைச்சரின் வாக்குறுதியை இந்த தொகுதி மக்கள் நம்புவதே காரணம் என்று சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இடைத்தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டால் பெரிய அளவில் பயன் இருக்காது. ஆனால் ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் தேவையான திட்டங்கள் நிறைவேறும், அ.தி.மு.க. வேட்பாளரிடம் சொல்லி தொகுதிக்கு வேண்டியதை பெறலாம் என்று வாக்காளர்கள் கருதியதால்தான் அ.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்க காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க. வேட்பாளர் மட்டுமே ஒரு பெண் வேட்பாளர். மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஆண் வேட்பாளர்கள். இதனால் பெண்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு ஏற்பட்டுவிட்டது.
 
அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி ஏற்கனவே நகர்மன்ற தலைவியாக இருந்து அறிமுகமானவர். அவரது தந்தையும் அ.தி. மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. இதனால் அவரது குடும்ப ஓட்டுக்களும் அவரது குடும்பத்தினருக்குள்ள செல்வாக்கும் கூடுதல் பலத்தை கொடுத்தன.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வை விட 3 மடங்கு அதிகமாக ஓட்டுக்களை பெற்று இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மற்றும் பெரும்பாலான பிரிவினர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளனர். கலிங்கப்பட்டி தவிர மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அ.தி.மு.க.வுக்கே அதிகமாக ஓட்டுக்கள் கிடைத்து இருக்கின்றன.
 
அரசு திட்டங்கள் தொகுதி மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வினர் ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்த வியூகத்தின்படி 32 அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிட்டு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்கள்.
 
மற்ற கட்சிகள் தேர்தல் பணியை தொடங்குவதற்குள் அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பணியை நிறைவு செய்து விட்டனர்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணமும், வாக்குறுதிகளும் சங்கரன்கோவில் மக்களுக்கு முழு நம்பிக்கையை கொடுத்ததால் அது அ.தி.மு.க. அமோக வெற்றியை அள்ள வழி வகுத்தது என்றே அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger