Friday, 27 July 2012
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு, 5 கிலோ தங்கம் அளிக்க போவதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலப்பதக்கம் பெறும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் வழங்க சகாரா நிறுவனம் முன்வந்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 204 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் சுமார் 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் மொத்தம் 13 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிகளவிலான வீரர்கள், வீராங்கனைகள், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதால், இந்த முறை நாட்டிற்கு அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகமடையும் வகையில், சகாரா நிறுவனம் ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியர்களில் தங்கப்பதக்கம் வெல்லும் நபருக்கு 5 கிலோ தங்கம் வழங்கப்பட உள்ளது. வெள்ளிப் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 3 கிலோ தங்கமும், வெண்கலம் பதக்கம் வெல்லும் இந்தியருக்கு 2 கிலோ தங்கமும் பரிசளிக்க உள்ளதாக சகாரா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் குழு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கம் பெறும் அணியின் வீரர்களுக்கு, தங்கம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசளிக்கப்படும் தங்கம் பதக்கம் வடிவில் வழங்கப்படும்.
இது குறித்து சகாரா இந்தியா பரிவார் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய வீரர்களும் நமது தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். ஒரு விளையாட்டு வீரரால் இதை விட நாட்டிற்கு வேறெந்த வகையிலும் பெருமை சேர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்தியர்களை உற்சாகப்படுத்த இது ஒரு சிறிய அளவிலான பரிசு அறிவிப்பு ஆகும். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர் நாட்டின் ஒரு வெற்றி சின்னமாகவே கருதப்படுவார் என்றார்.