தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க பிரச்சினையில் கேரள அரசின் தான்தோன்றித்தனமான போக்கின் காரணமாக முல்லைப் பெரியாறு பகுதியில் கலவரம் ஏற்படும் அபாயச் சூழ்நிலை உருவாகி வருகிறது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கேரள அரசு மறுத்து வருகிறது.
மேலும் அணை பலவீனமானது என்றும், புதிய அணை கட்டப்போவதாகவும் தன்னிச்சையாக கூறிவருகிறது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற அய்யப்ப பக்தர்களை தாக்கியும், பேருந்துகளில் சென்ற பொதுமக்களை தாக்கியும், பேருந்துகளை சேதப்படுத்தியும் அங்குள்ள சமூகவிரோதிகள் எத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டாலும், அவற்றை கேரள போலீஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.
கேரள சட்டமன்றம் கூடி அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து புதிய அணையை கட்ட வேண்டும் என்றும், ஏற்கனவே இருக்கிற முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இவற்றின் விளைவாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பகுதி வாழ் மக்கள் கேரளத்திற்கு செல்லும் போக்குவரத்தை நிறுத்தியும், தமிழ்நாட்டில் இருந்து விளை பொருட்கள் அங்கு செல்லக்கூடாது என்று தடுத்தும், ஆர்ப்பாட்டங்களிலும், பேரணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு அரசு அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இவ்வாறு இரண்டு பக்கங்களிலும் கலவரச் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும், இது இன்னும் அதிகரிப்பதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதையும், இந்திய அரசு கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆராய 23-ந் தேதி நிபுணர் குழுவை அனுப்பி வைக்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே பற்றி எரிகிற தீயை இந்திய அரசு மேலும் வளர்க்கிற போக்கைக் கண்டித்து தேனியில் 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment