புதுடில்லி: இந்தியாவில் முதல் கார்பந்தய திருவிழா வரும் 30ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக, புதிதாக தயாரிக்கப்பட்ட "புத்தா சர்வதேச சர்கியூட்' தயாராக உள்ளது.
உலகளவில் கார்பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது "பார்முலா-1′. ஆண்டு முழுவதும், உலகின் 19 முன்னணி நகரங்களில் போட்டி நடக்கிறது. மொத்தம் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்பார்கள். இதன் முடிவில் ஒவ்வொரு வீரரும் பெறும் புள்ளிகள் அடிப்படையில், முதலிடத்தை பெறுபவர் ஒட்டுமொத்த "சாம்பியன்ஷிப்' பட்டம் வெல்லலாம்.
இதுவரை நடந்த 17 சுற்று போட்டிகளில், 10ல் முதலிடம் பெற்ற "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மொத்தம் 349 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
முதன் முறையாக…
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து வந்த இந்த பந்தயம், முதன் முறையாக வரும் 30ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டின் 17வது பந்தயத்தை நடத்த, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 875 ஏக்கர் நிலப்பரப்பில், புதிதாக "புத்தா சர்வதேச சர்கியூட்' மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.
மொத்தம் 5.14 கி.மீ., சுற்றளவு கொண்ட, இந்த போட்டியின் பந்தய தூரம் 308.4 கி.மீ., ஆகும். இம்மைதானத்தில் சராசரியாக 210.03 கி.மீ., வேகத்தில் செல்லும் போது, இந்த ஒரு சுற்றை ஒரு நிமிடம், 27.02 வினாடியில் கடக்கலாம்.
மொத்தம் 60 சுற்றுகள் சுற்ற வேண்டும். வீரர்கள் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என்பதால், இது உலகின் இரண்டாவது அதிவேக மைதானம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த போட்டியை ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
இந்திய அணி:
உலகின் முன்னணி அணிகளாக உள்ள ரெனால்ட், மெக்லாரன்-மெர்சிடீஸ், பெராரி, மெர்சிடீஸ் போன்றவற்றுடன் இந்தியா சார்பில், போர்ஸ் இந்தியா-மெர்சிடீஸ் என்ற அணியும் உள்ளது. இதுவரை நடந்த 16 சுற்றுகளில் இந்திய அணி 49 புள்ளிகள் மட்டும் பெற்றுள்ளது.
பெயர் மாற்றம்:
பெங்களூரு ஐ.பி.எல்., அணியின் விஜய் மல்லையா, இந்த அணிக்கு உரிமையாளராக இருந்தார். கடந்த வாரம் இந்த அணியின் 42.5 சதவீத பங்குகளை, ரூ 500 கோடிக்கு சகாரா நிறுவனம் வாங்கியது. மீதம் 42.5 சதவீதம் மல்லையாவிடமும், நெதர்லாந்து கம்பெனியிடம் 15 சதவீத பங்குகளும் உள்ளன. இதனால் டில்லி "பார்முலா-1′ பந்தயத்தில் "சகாரா போர்ஸ் இந்தியா' என்ற புதிய பெயரில், இந்திய அணி களமிறங்குகிறது.
விவசாயிகள் எதிர்ப்பு
கார்பந்தய மைதானத்துக்கு நிலங்கள் கையகப்படுத்தபட்டதில், விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு தரவில்லை. இதனால், போட்டி நடக்கும் போது, விவசாயிகள் இடையூறு செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" போட்டி நடக்கும் போது, யாராவது இடைஞ்சல் ஏற்படுத்த முயன்றால், அவர்களை தகுந்த முறையில் அணுகுவோம்," என்றார்.
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
"பார்முலா-1′ கார் பந்தயத்துக்கு உத்தரபிரதேச அரசு வரிவிலக்கு அளித்து இருந்தது. இதை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.கே.ஜெயின், அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில்,"பொது மக்களுக்கு பயன்தரும் நிகழ்ச்சிகளுக்கு தான் வரிவிலக்கு தரமுடியும். "பார்முலா-1′ கார்பந்தய டிக்கெட் விலை ரூ. 35 ஆயிரம் உள்ள நிலையில், வரிவிலக்கு எப்படி தரலாம்," என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேன் பாராட்டு
இந்தியாவின் முதல் "பார்முலா-1′ கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், இப்போட்டியில் "ஹிஸ்பானியா ரேசிங் டீம்' என்ற அணிக்காக பங்கேற்கிறார். டில்லி போட்டி குறித்து கூறுகையில்,"" உலகின் முக்கியமான அனைத்து "பார்முலா-1′ டிராக்குகளிலும், கார் ஓட்டியுள்ளேன். இந்த "சர்கியூட்' உலகின் சிறப்பானதாக உள்ளது," என்றார்.