Wednesday, 7 December 2011
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தப்பிவந்த பெண்கள் தங்களை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிக மோசமான முறையில் நடத்தியதாக கூறியுள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னும் அந்த கொடுமையின் பயங்கரம் கண்ணிலிருந்து விலகவில்லை.
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து அணையைப்பற்றி கேரள ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்ப்ப் படுகின்றன. கேரளமாநிலத்தவரால் சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர்.
பெண் தொழிலாளர்கள் மானபங்கம்
இந்த நிலையில் தேனி, கம்பம், மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்குச் சென்ற பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட பெண்களை கேரளமாநிலத்தவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு திரும்பியுள்ளனர்.
கேரளா மாநிலத்தவரால் பாதிக்கப்பட்ட 50 வயதுப் பெண் கருப்பாயி கூறுகையில்,
ஏலக்காய் தோட்டத்தில் வேலைக்காக சென்றிருந்தோம் திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு எங்கள் வீட்டில் இருந்து போன் வந்தது. ஐயப்ப பக்தர்களை தாக்கப்படுவதால் உடனே வீடு திரும்புங்கள் எங்கள் வீட்டில் இருந்து போனில் கூறினர். நாங்கள் உடனே வேலையை விட்டு விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கேரளமாநிலத்தவர் சிலர் எங்களை மறித்தனர். எங்களில் சிறுவயதுடைய பெண்களை தனியாக அழைத்து அனைவரின் முன்னிலையிலும் புடவைகளை அவிழ்க்க சொல்லி சிரித்தனர். நாங்கள் பயந்து அழுதுவிட்டோம். எங்களுக்கு வேலைக்கு போகவே அச்சமாக இருக்கிறது என்றார்.
கம்பத்தை சேர்ந்த முத்துப்பேச்சி கூறியதாவது,
எங்கள் முன் வந்து நின்ற மலையாளிகள் சிலர் தமிழர்களை திட்டுவதற்கு கேரளத்தவர்கள் உபயோகப்படுத்தும் கொச்சையான சொல்லான 'பாண்டி' என்ற வார்த்தையால் எங்களை திட்டினர். சொல்ல முடியாத பல பாலியல் சம்பங்களை நிகழ்த்தினர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை நாங்கள் கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தின் மூலம் தேக்கடிக்கு வந்துவிட்டோம் என்றார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ். பழனிச்சாமி, திங்கட்கிழமை இரவு தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு எஸ்டேட் பணிக்கு சென்ற 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார்.
கும்பகோணத்திலும் தாக்குதல்
இதேபோல கும்பகோணத்திலும் கேரளக்காரர்களின் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அங்குள்ள ஜாய் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்து நிறஉவன மேலாளர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.