திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஒவ்வொன்றிலிருந்தும், மிகக் கடுமையான போராட்டம் நடத்திய பின்னரே வெளியில் வந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் விடுபட முடியாமல் கடுமையாக திணறி வருகிறார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவதாக கூறிய ஜெயலலிதா, தனது முதல்வர் காலத்தின்போது ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக் குவித்தது எப்படி என்பதுதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
1991ம் ஆண்டு ஜூன் முதல் 1996 மே மாதம் வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தார், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. அதிமுக படு தோல்வியைச் சந்தித்தது. முதல்வரான பின்னர் கருணாநிதி கூறுகையில், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும், ஊழல் செய்தவர்கள் குறித்தும் தீவிரவிசாரணை நடத்தப்படும், தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்துவோம் என்று அறிவித்தார்.
அதன்படி திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது மொத்தம் 48 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஜெயலலிதா மீது மட்டும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமான வழக்குதான் வருமானத்திற்கு புறம்பான வகையில் சொத்துக் குவித்த வழக்கு.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர் முதலும், கடைசியுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதில் மட்டுமே.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சுருக்கமான விவரம் என்னவென்றால், 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றதாக கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் குற்றம் சாட்டினர். இதை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தனிப்படையும் உறுதி செய்தது. இதன் பேரிலேயே ஜெயலலிதா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை 2வது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வருமானத்திற்குப் புறம்பான சொத்துக்களாக சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பண்ணை வீடுகள், பங்களாக்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் வாங்கிப் போடப்பட்ட விவசாய நிலங்கள், ஹைதராபாத்தில் உள்ள பண்ணை இல்லம், நீலகிரியில் உள்ள டீ எஸ்டேட், வங்கிகளில் போடப்பட்டிருந்த பணம், நகைகள், நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் ஆகியவை வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஜெயலலிதா மீது பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் கீழ் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 1997ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்குச் சொந்தமான 77 அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 3.21 கோடியாகும். அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,000 ஏக்கர் பாசன நிலங்களையும் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
தனி நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் அடுத்து ஆட்சி மாறியது. திமுக வெளியேறி அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து இந்த வழக்குகளில் ஜெயலலிதா தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வேறு மாநிலத்திற்கு இவற்றை மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று உச்சநீதிமன்றம் பெங்களூருக்கு இந்த வழக்கை மாற்றியது. அன்று முதல் சொத்துக் குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா நேரில் ஆஜரானதில்லை. மேலும் தொடர்ந்து வாய்தாக்களை வாங்கி வந்தார். நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற பிரம்ம பிரயத்தனம் செய்து பார்த்தார். பெங்களூரில் தனது பாதுகாப்பு குறித்த சந்தேகங்களைக் கிளப்பினார். இதனால் தனி நீதிமன்றமே தாற்காலிமாக நாளை ஒரு தினத்துக்கு ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் நேரில் ஆஜராவதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். காவிரி விவகாரத்தையும் அவர் லேசாக கிளறிப் பார்த்தார். இந் நிலையில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாளை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டது.
இதனால் தற்போது முதல் முறையாக இந்த வழக்குக்காக நாளை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.