Monday, 27 February 2012
தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். 1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். பின்னர் அக்கட்சியை கலைத்தார். 2006 ஏப்ரல் 5-ந் தேதி தி.மு.க.வில் இணைந்தார்.
தற்போது அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். சமீப காலமாக பாக்யராஜுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அ.தி.மு.க.வில் சேர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள். அ.தி.மு.க.வில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவ்விழா நடைபெறவில்லை. விரைவில் பாக்யராஜும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் சேர உள்ளனர். இது குறித்து பாக்யராஜ் குடும்பத்தினரிடம் கேட்ட போது அ.தி.மு.க.வில் இணைவதை மறுக்கவும் இல்லை. உறுதிபடுத்தவும் இல்லை.
பாக்யராஜ் புதுவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவித்தனர். அ.தி.மு.க.வில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் ஜெயலலிதா அழைப்புக்காக காத்து இருப்பதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.