1996 உலக கோப்பையின் அரையறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைய காரணம் மேட்ச் பிக்சிங் என்ற சந்தேகம் உள்ளதாக வினோத் காம்ப்ளி குற்றச்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மறுத்துள்ளார்.
1996ம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையறுதி போட்டியில் இலங்கையிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் பின்னனியில் 'மேட்ச் பிக்சிக்' நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி, டிவி சேனல் பேட்டி ஒன்றில் கூறினார்.
குற்றச்சாட்டப்பட்ட போட்டி நடந்த போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இது குறித்து சி.என்.என். ஐ.பி.என். டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அசாருதீன் கூறியதாவது,
வினோத் காம்ப்ளி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு இந்திய அணியினருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அணி வீரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தான் குறிப்பிட்ட போட்டியில் முதலில் பீல்டிங் செய்ய அறிவித்தேன். இது ஒரு அணியின் ஒருங்கிணைந்த தீர்மானம். அந்த போட்டியில் எனது சொந்த விருப்பத்தில் செயல்படவில்லை என்பதை கூற நான் வெட்கப்படவில்லை.
காம்ப்ளியின் குற்றச்சாட்டுகளை பார்த்தால், அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் காம்ப்ளி தூங்கி இருப்பார் என்று தோன்றுகிறது. காம்ப்ளி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அரையறுதிப் போட்டியில் முதலில் இலங்கையை பேட்டிங் செய்யவிட்டு, நாம் சேஸ் செய்துவிடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்ததால், அந்த முடிவை கேள்வி கேட்பது வேதனைக்குரியது. காம்ப்ளியின் பேச்சின் மூலம் அவரது தரம் தெரிகிறது.
இந்திய அணியில் பல கேப்டன்களின் தலைமையில் காம்ப்ளி விளையாடியுள்ளார். அதில் எனது தலைமையில் விளையாடியது சிறப்பாக இருந்ததாக, காம்ப்ளி பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது காம்ப்ளி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு எரிச்சலை அளிக்கிறது.
மேட்ச் பிக்சிங் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மை விரைவில் தெரிய வரும். இந்த குற்றச்சாட்டால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள காம்ப்ளி, தன்னை தானே முட்டாளாக்கி கொண்டார், என்றார்.