Sunday, 30 September 2012
ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி
ஓசூர், அக். 1-
ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 4 1/2 மணி போராட்டத்துக்கு பின்பு உயிரோடு மீட்கப்பட்டான். தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்பு பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது மந்தையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (30), இவரது மனைவி பத்மா (26), இவர்களுக்கு பூஜா (3 1/2) என்ற பெண் குழந்தையும், 2 1/2 வயதில் குணா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதை மூடாமல் அப்படியே விட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பத்மா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு விவசாய நிலத்திற்கு துணி துவைக்க சென்றார். அப்போது குழந்தைகள் 2 பேரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். பத்மா துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது மூடாமல் இருந்த 600 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் குணா காலை உள்ளே விட்டு விளையாடு கொண்டு இருந்தான். அப்போது திடீரென அவன் தவறி அந்த குழிக்குள் விழுந்தான். இதைப் பார்த்த பூஜா தனது தாய் பத்மாவிடம் கூறினாள்.
குழிக்குள் விழுந்த சிறுவன் குணா அம்மா... அம்மா... என்று அலறி துடித்தான். இதைப்பார்த்து செய்வதறியாத தவித்த பத்மா கூச்சல் போட்டார். இதையடுத்து தோட்டத்தில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியும் மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சித்ராவுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வருவாய் அலுவலர் பால்ராஜ், வி.ஏ.ஓ. மாதேஸ், ஆகியோர் விரைந்து வந்தனர். ஓசூர் சப்-கலெக்டர் பிரவீன் நாயர் உடனடியாக மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் 10 வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. டாக்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் செலுத்த ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறையினர் ஆழ்துளை கிணற்றில் கயிறு விட்டு பார்த்த போது உள்ளே சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக 2 ஜே.சி.பி. எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டது. காலை 11-30 மணிக்கு ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. பகல் 1 1/2 மணிக்கு 15 அடி ஆழத்தில் பாறை சிக்கியதால் மேற்கொண்டு தோண்ட முடியவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் குழியின் பக்கவாட்டில் குழி தோண்டினர். அப்போது அந்த இடத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் 4 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்தான். இதனால் சிறுவனை மீட்க முடியவில்லை. இதையடுத்து 5 அடி நீள கொக்கி கம்பி மற்றும் நூல்கயிறு கொண்டு வரப்பட்டது. சிறுவனின் சட்டை காலரில் கம்பியை மாட்டி ஒருவர் பிடித்துக் கொள்ள, சிறுவனின் கையில் கயிற்றால் சுருக்கு மாட்டப்பட்டது. அந்த கயிறை மற்றொருவர் பிடித்து கொண்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவர் துளையின் உள்ளே சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த டாக்டர் சிறுவன் குணாவுக்கு ஆம்புலன்சில் அவசர சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவனை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவனை சந்தித்தார். மேலும் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார். சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த மீட்புப்பணி மாலை முடிவடைந்தது. சிறுவனை உயிரோட மீட்க தீயணைப்பு துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்தனர். மின்னலாக செயல்பட்ட அவர்களின் மீட்பு நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.