சேலத்தில் தன்னிச்சையாக இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவுக்கு திமுக மேலிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக இளைஞர் அணியைப் பலப்படுத்த அக்கட்சியின் பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் 30 வயதுக்குட்பட்டவர்களிடம் மனு வாங்கி தானே நேரில் சென்று நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திற்கான இளைஞர் அணி நிர்வாகிகளைத் தன்னிச்சையாகத் தேர்வு செய்யும் பொருட்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா இன்று சேலத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த திமுக தலைமைக்கழகம் இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகத்தின் சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் அளவில் பல இடங்களில் இளைஞர் அணிக்கு உறுப்பினர்களை சேர்த்து நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்து கொண்டிருக்கும் நிலையில் இளைஞர் அணி உளபட பல்வேறு அணிகளுக்கு நேரடியாக மாவட்ட கழகமே தேர்வு செய்வதாக சேலம் மாவட்டத்தில் தனியாக அறிவிக்கப்பட்டு இருப்பது தலைமை கழகத்தின் அனுமதி பெறாதது மட்டுமல்லாமல் கழக கட்டுப்பாட்டை மீறியதாகவும் ஆகிவிடும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடக்கவில்லை. இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றனர். இருப்பினும் ஒரு சிலர் வீரபாண்டி ஆறுமுகம் வீடு உள்ள பூலாவாரியிலும், கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையிலும் கூடியிருந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் திமுக தலைமைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று அறிவித்தபடி நேர்காணல் நடக்குமா என்று தெரியவில்லை.
ஏற்கனவே திமுக நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் பெயரைச் சொல்ல வீரபாண்டி ஆறுமுகம் மறந்ததால் அவரை சிலர் பேச விடாமல் தடுத்தது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது மகன் வீரபாண்டி ராஜா தன்னிச்சையாக நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது.
வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.