தடையை மீறி நாளை பேரணி: தெலுங்கானா தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது தடையை மீறி நாளை பேரணி: தெலுங்கானா தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது
நகரி, செப். 28-
தனி தெலுங்கானா கோரி ஐதராபாத்தில் வருகிற 30-ந்தேதி மாபெரும் பேரணி நடத்த தெலுங்கானா போராட்டக்குழு அறிவித்து உள்ளது. இந்த தெலுங்கானா பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. பேரணியின்போது வன்முறை ஏற்பட கூடும் என உளவு துறை எச்சரித்ததையடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆனால் திட்ட மிட்டப்படி பேரணி நடக்கும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஐதராபாத் உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரணியை முறியடிக்க துணை ராணுவப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா பேரணியின் ஒத்திகையாக நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஐதராபாத்தில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை பல்கலைக்கழக வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்த மோதலில் மாணவர்கள் உள்பட ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். இந்த நிலையில் 30-ந் தேதி பேரணிக்கு அனுமதி தர வேண்டும் என்று தெலுங்கானா பகுதி தலைவர்கள் கவர்னர் நரசிம்மரை சந்தித்து மனு கொடுத்தனர்.
ஆனால் வன்முறை அபாயத்தை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பேரணிக்கு ஆதரவு திரட்டி வரும் தெலுங்கானா பகுதி மாவட்ட தலைவர்களை போலீசார் முன் எச்சரிக்கையாக கைது செய்து வருகிறார்கள்.
மாவட்டத்துக்கு 150 பேர் வீதம் 10 மாவட்டங்களிலும் இதுவரை 1500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐதராத்தில் உள்ள தலைமைச் செயலகம், சட்ட மன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment