Wednesday, 28 September 2011
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசுகையில்,
இந்த கூட்டத்துக்கு வரும்போது, இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுக்கு வர இருப்பதாக செய்தி கேள்விபட்டேன். நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்டார்.
இப்போதும் சொல்கிறேன், மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பபடிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் கூட்டணி சேர்ந்தேன்.
இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். அதன் பிறகுதான் விமர்சிப்பேன்.
போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சனைகள் சரியாகி விடும்.
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டுமா? அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா? எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா?.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை தருவோம்.
சாலை, மருத்துவம், போக்குவரத்து வசதி என்று செய்ய ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிதி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை. பிரிச்சு, பிரிச்சு ஆட்சியை கொடுங்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரிசி விலை ஏறவில்லை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மக்களை தங்க தட்டில் வைத்து அழகுபார்ப்பேன்.
கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம் என்று மக்கள் போராடினார்கள். அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை என்று தமிழக முதல்வர் கூறினார். உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கே சென்று நான் ஆதரவு தெரிவித்தேன். பின்னர், அரசாங்கமும் அந்த திட்டம் வேண்டாம் என்றது. நான் எப்போதும் மக்களின் பக்கம்தான் இருப்பேன்.
ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால் நான் வளர்ந்தது அப்படி. தவறு நடந்தால் கோபப்படுவேன். தட்டிக் கேட்பேன். தேமுதிகவினர் ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றார்.
கூட்டத்தில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் பேசினர்.
அதிமுக வேட்பாளர்கள் தன்னிச்சையாக அறிவிப்பு-பிரசாரத்தில் பேசுவேன்:
முன்னதாக நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது குறித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுவேன் என்றார்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: உங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நிருபர்களை நுழைய விடுவதில்லையே?
பதில்: அலுவலகத்தில் நிருபர்களை விடவில்லை என்று உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். நிருபர்களாகிய உங்களுக்கு எவ்வாறு வேலை இருக்கிறதோ, அதே போல் எங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கு சில வேலைகளை நான் கொடுத்திருக்கிறேன். அந்த வேலைகள் பாதிக்கப்படும். ஆகவே தான் நிருபர்களை நான் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே யாரும் தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி அடுத்த தேர்தலில் நீடிக்குமா?
பதில்: இப்போது தான் எங்களுக்குள் கூட்டணி உருவாகி உள்ளது. எங்களுடைய நட்பு போகப்போக ஆலமரம் போல் விரிந்து எல்லா இடத்திலும் பரவும்.
கேள்வி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன?
பதில்: ஒரு வேட்பாளர் பற்றி சிந்திப்பதற்கு எனக்கு தற்போது நேரம் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அது பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: இதற்கு முன்பு தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று கூறியிருந்தீர்கள். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தீர்கள், இப்போது மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கீறிர்களே?
பதில்: இதுபற்றி நீங்கள் தனியாக கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். உள்ளாட்சி தேர்தலின் போது நான் 20 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் போது நீங்கள் கேட்கக்கூடிய இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறுவேன். ஒரே நாளில் எல்லா கேள்விகளுக்கும் பதிலை கொட்ட வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: அ.தி.மு.கவுடன் உங்கள் கூட்டணி தொடர்கிறதா? அ.தி.மு.க. எல்லா வேட்பாளர்களையும் தன்னிச்சையாக அறிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசுவேன். இப்போ இதுக்கு பதில் சொல்ல முடியாது.. நான் குடியாத்தம் கூட்டத்தில் பேசுகிறேன். அங்கு வந்து வேணும்னா கேளுங்க..
கேள்வி: தே.மு.தி.க. அலுவலகத்தின் உள்ளே நிருபர்களை அனுமதிப்பதில்லை எதற்காக?
பதில்: கேட்டதையே கேட்டுக்கிட்டு இருந்தா என்னத்த சொல்ல.. எனக்கு கட்சி அலுவலகத்தின் உள்ளே வேலை இருந்ததால் நிருபர்களை அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் உங்களிடம் முதலிலே மன்னிப்பு கேட்டேன். இதையும் மீறி நான் வெளியே நின்றேன் என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? உங்களின் வீட்டின் உள்ளே கேட்காமல் வந்தால், ஏன் வந்தாய் என்று கேட்பீர்கள் அல்லவா? உரிமை இருப்பதால்தானே நீங்கள் கேட்கின்றீர்கள். சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் நீங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள். நிருபர்களுக்கு எனது அலுவலகத்தில் குளிர்சாதன அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வராவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றார்.