Tuesday, 24 September 2013
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: வீடுகள் இடிந்து விழுந்து 50 பேர் பலி Powerful earthquake strikes Balochistan
Tamil NewsToday, 05:30
பலூசிஸ்தான், செப். 24-
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியிலுள்ள பலூசிஸ்தான் மாகாணம் பூகம்பத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியாகும். இப்பகுதியில் இந்தியன் தட்டும், யுரேசிய தட்டும் சந்திக்கிறது. இந்த இரண்டு தட்டுகளில் ஒன்று நகர்கிற போது அதன் தாக்கம் பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கமாக வெளிப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தர் மற்றும் அவாரன் பகுதியில் இன்று மாலை கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான இந்த பூகம்பத்திற்கு அப்பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இரவு 8 மணி நிலவரப்படி சுமார் 50 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மிகப்பெரிய பலூசிஸ்தான் மாகாணத்தில் குறைந்த அளவே மக்கள் தொகை உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தல்பாண்டியன் பகுதியிலிருந்து 145 கிலோ மீட்டர் தென்கிழக்கே 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் பூகம்ப மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடுமையான இந்த பூகம்பத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த பூகம்பத்தால் கராச்சி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
மேலும் இப்பூகம்பத்தின் தாக்கம் டெல்லி, அரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் உணரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பலூசிஸ்தான் எல்லையோரமாக ஈரானில் 7.8 அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இதில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link