ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: இந்திய அணியில் ஷேவாக் இடம் பெறுவாரா? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: இந்திய அணியில் ஷேவாக் இடம் பெறுவாரா?
கொழும்பு, செப். 28-
இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதின. 20 ஓவரில் இரு அணிகளும் 174 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்ததால் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய இலங்கை 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களும், நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்களும் எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 164 ரன்களே எடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எப் பிரிவில் இன்று நடக்கும் முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. எப் பிரிவில் நடக்கும் மற்றொரு போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 8 போட்டிகளில் 2 ஆட்டங்களில் வெற்றி பெறுவது அவசியம். எனவே இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுவது சவாலாக இருக்கும். இதனால் இன்றைய போட்டியில் வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் டோனி தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள் என்ற பார்முலா பலனை கொடுத்தது. இதனால் இன்றைய போட்டியிலும் இதே பார்முலாவை டோனி கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி டோனி கூறுகையில், இன்றைய போட்டியில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால் ஆடும் லெவன் அணியில் யார்-யார் இடம் பெறுவார் என்பது எனக்கு இன்னும் தெரியாது. இப்போது ஆடப்போவது புது ஆடுகளம், அதை ஆய்வு செய்துவிட்டு அதற்கு ஏற்ப போட்டிக்கு முன்பு முடிவு செய்வோம் என்றார்.
டோனியின் முடிவுப்படி ஷேவாக் அல்லது யுவராஜ்சிங் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படுவார். இன்றைய போட்டிக்கு அதிரடி பேட்ஸ்மேன் அவசியம் தேவை. கடந்த போட்டியில் ஷேவாக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த பயிற்சியில் அவர் கலந்து கொண்டார். இதனால் இன்றைய போட்டியில் ஷேவாக் அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. பவுலர்களை பொறுத்த வரை ஜாகீர்கான் பந்து வீச்சு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எடுபடவில்லை.
இங்கிலாந்து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் இன்று மீண்டும் இடம் பெற்றால் தமிழக வீரர் பாலாஜி நீக்கப்படுவார். கொழும்பில் அவ்வப்போது மழை பெய்து ஆட்டத்தை மிரட்டி வருகிறது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment