Thursday, 15 December 2011
பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர் துணைக்கண்டத்தின் முதல் முழுவேக பந்து வீச்சாளர். தன் ஆட்டவாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடுகளத்தின் ஆதரவு தேவைப்படாத ஒரே வேகவீச்சாளர். ஸ்விங் செய்வது பற்றிக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளாதவர். மிகுவேகத்தில் குச்சிக்கு நேராக வரும் பந்து, தோள்பட்டை உயரத்தில் எழும் பந்து எனும் இரு ஆயுதங்களை மட்டுமே பிரதானமாய் நம்பியவர். இதே காரணத்தினாலே கூர்மையான ஒரு விக்கெட் கீப்பரோ ஸ்லிப் கேட்சர்களோ ஷோயப்புக்கு முக்கியமல்ல. புத்திசாலித்தனமான கள அமைப்பு கூட பொருட்டல்ல. பாகிஸ்தானின் மூன்று சிறந்த வேகவீச்சாளர்களாகிய அக்ரம், வக்கார் மற்றும் இம்ரான் ஆகியோர் பந்தை பேச வைக்கும் திறனாலும் தங்களது கட்டுப்பாட்டினாலும் தான் கூட்டாக பாகிஸ்தானுக்கு ஆயிரத்துக்கு மேல் விக்கெட்டுகள் குவித்தனர். இம்ரானுக்கு கீழ் அக்ரம் மலர்ந்தார். பின்னர் வகாரும், அகுப் ஜாவிதும் உருவானார்கள். அக்ரமுக்கு கீழ் சக்லைன் முஷ்டாக் சிறந்தார். ஷோயப் மட்டும் என்றுமே இரு தனியாள் படை. ஒரு ஒற்றை பீரங்கி. அவரை யாரும் செலுத்த தேவை இல்லை. இயக்கி விட்டால் போதும். ஷோயப் எந்த கேப்டனுக்கு கீழும் சோபித்ததில்லை. அவர் தனக்கு கீழ் தனக்காக ஆடும் போது மட்டுமே அணிக்காக ஆட்டங்களை வென்றளித்தார். அதே வகையில் அக்ரமுக்கு பிறகு தனது பந்து வீச்சுக்காக ஏகப்பட்ட ரசிகர்களை வென்ற நட்சத்திர பந்து வீச்சாளரும் ஷோயப்தான். ஒரு பேட்டியில் தனக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர் கடிதங்கள் வருவதாக தெரிவித்தார். அவரது நீண்ட தயாரிப்பு ஓட்டம், இறுதியாக பந்தை விடுவிக்கும் வேகம், விக்கெட் வீழ்த்தியதும் இறகுகளை விரித்தோடும் கொண்டாட்டம் ஆகியன கிரிக்கெட் வன்மத்தின், மூர்க்கத்தின் காட்சிபூர்வ உச்சம். ஷோயப்பின் ஆட்டவரலாற்றுக்கு இருபக்கங்கள் உண்டு. ஒன்று அவர் ஒரு முன்னணி வீச்சாளராக அக்ரம் மற்றும் யூனிசுக்கு பிறகான காலகட்டத்தின் பாகிஸ்தானின் பந்துவீச்சை முன்னெடுத்தார். இது ஒரு முக்கியமான பங்களிப்பு. ஏனெனில் இப்போது போல் அல்லாது அந்த கட்டத்தில் பாகிஸ்தான் தற்போதுள்ள இந்தியாவை போல் மிதவேக வீச்சாளர்களையே (ரசாக், அசர் மஹ்மூத்) உருவாக்கியது. மிக சமீபமாக அமீர், ஆசிப், ரியாஸ் போன்ற தரமான வேகவீச்சாளர்கள் தோன்றும் வரையில் பாகிஸ்தானின் வேகவீச்சின் முகமாக அக்தரே இருந்தார். அடுத்து ஆணவமும் தன்முனைப்பும் மிகுந்த ஒரு கிரிக்கெட் நட்சத்திரமாக அவர் பாக் அணியின் ஆட்டப்போக்கு, திட்டமிடல் ஆகியவற்றுக்கு எதிரானவராக இருந்தார். இருசக்கர வாகனங்கள் இடையே நகரும் ஒரு புல்டோசர் போல் தனது ஆகிருதியால் அவர் அணிக்கு ஒரு இடைஞ்சலாக, தொந்தரவாக, வளர்ச்சிக்கு தடையாக இருந்தார். வாசிம் மற்றும் இன்சமாம் இருவரும் ஷோயபுக்கு அதிக ஆட்டங்களில் அணித்தலைவராக இருந்தவர்கள். இருவரும் அவர் விசயத்தில் மிகவும் அதிருப்தி உற்றிருந்தனர். அநேகமாக நம்மால் கற்பனையே பண்ண முடியாத வகையில் அணித்தலைவர்களால் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதவராக அவர் இருந்தார். பலமுறை அணியில் இருந்து விலக்கப்பட்டார். பெரும்பாலும் அவரது ஒழுக்கத்துக்காகத் தான். பிறகு முப்பது வயதை நெருங்க ஷோயப் உடற்தகுதி காரணமாய் அணியில் இருந்து விலக்கப்பட்டார். சக வீரரான ஆசிப்பை அடித்தது, அணித்தலைவர்களுடன் தொடர்ந்து மோதியது போன்ற சம்பவங்கள் அவரை தேர்வாளர்களின் பார்வையில் இருந்து மேலும் மேலும் தள்ளி வைத்தன. மேலும் அவரது சேட்டைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் ஆகி இருந்தது. பாக் பந்துவீச்சு அவர் இல்லாமலே வலுவாக இருந்தது. ஷோயப் நீக்கப்பட்ட போதெல்லாம் பாக் சுலபமாக வென்றது. ஆக ஷோயப் தான் பாக் அணியின் முன்னேற்றத்திற்கு எதிரி என்று மீடியா சித்தரிக்க இந்த சூழ்நிலை உதவியது. உலகின் மிகச் சிறந்த வேகவீச்சாளர் இப்படித்தான் மெல்ல மெல்ல தன் வீழ்ச்சிக்கு தானே காரணமானார். ஒரு நட்சத்திரம் பூமியில் இறுதியாய் விழுந்த போது அது வெறும் கரித்துண்டாக மாறி இருந்தது. அதற்கு பின் 2011 உலகக் கோப்பை அணியில் அவர் ஆடிய போதும் பின்னர் சமீபமாக தனது கிரிக்கெட் வெளியேற்றத்தை ஒப்புக் கொண்டு அவர் சர்ச்சைக்குரிய Controversially Yours எனும் சுயசரிதையை எழுதியுள்ள போதும் பரிதாபமும் கேலியுமே அனைவரின் எதிர்வினையாக உள்ளது. வாசிம் அக்ரம் "ஷோயப் தான் ஆடிய போதும் சரி இப்போதும் சரி எல்லாருக்கும் ஒரு தொல்லையாகவே இருக்கிறார்" என்றார். பிஷன் சிங் பேடி அவரது நூலை பற்றி பேசும் போது ஷோயப் ஒரு முட்டாள் என்று பொருள்பட பேசினார். காரணம் ஷோயப் அக்ரம் உள்ளிட்ட சகபாக் வீரர்களையும், சச்சின், திராவிட் ஆகியோரையும் பரிகாசம் செய்து பழி கூறியிருந்தார் என்பது இந்த எதிர்வினைக்கு உபரி காரணங்கள். ஆனால் இந்த நூல் வருவதற்கு முன்னரே ஷோயப் தன்னை ஒரு வேடிக்கை பாத்திரமாக மாற்றி இருந்தார். நட்சத்திரங்களுக்கு மட்டுமே இப்படியான இரட்டை வாழ்வு அமையும். முதல் பாதியில் அபரிதமாக போற்றப்படுவார்கள். அடுத்த பாதியில் கேலிச்சித்திரமாவார்கள்.
ஷோயப் ஏன் ஷோயப் ஆனார் என்பதற்கான விடை அவரது சுயசரிதையில் உள்ளது. நிழல் உலகம், பெட்டிங் வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் முன்னேற ஒருவருக்கு சூழ்ச்சியும், முதுகில் குத்தவும், உள் அரசியல் செய்யவும், செல்வாக்கை பெருக்கவும் தெரிய வேண்டும் என்கிறார் ஷோயப். கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தான் அணியை போல் வீரர்களின் மாற்றங்களை, தலைமை நிலையாமையின் அதிர்வுகளை, தீவிரவாதத்தின் நேரடி விளைவுகளை சந்தித்த அணி பிறிதொன்றில்லை. ஆதரவற்ற ஒரு தனியனாக திரிந்த ஆரம்ப காலத்தில் இருந்து பின்னர் அணியில் நுழைந்த பின்பான போராட்டங்கள் வரை இந்நூலில் விவரிக்கிறார். சுவாரஸ்யமாக ஷோயப் சச்சின் மற்றும் திராவிட் குறித்த எழுப்பிய விமர்சனங்களே இந்தியாவில் இந்நூலுக்கு மீடியா கவனம் பெற்றுத் தந்தது.
இரண்டு குற்றங்களை முன்வைக்கிறார். ஒன்று சச்சின் அவரது வேகப்பந்து வீச்சை சந்திக்க பயந்து நடுங்கினார் என்பது. அடுத்தது திராவிடால் இந்தியாவை வெற்றி இலக்குகளை நோக்கி வழிநடத்த முடிந்ததில்லை. சச்சின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத தொடைநடுங்கி. திராவிட் இறுதிவரை போராட முடியாத மனதிடம் அற்றவர். இந்திய கிரிக்கெட்டை ஓரளவு பின் தொடரும் பார்வையாளர்களுக்கே இது சுத்த அபத்தம் என்று விளங்கும். கடந்த முறை பாகிஸ்தானில் நாம் டெஸ்ட் தொடர் ஆடிய போது அதனை வென்றதற்கு முக்கிய காரணமே திராவிடின் இரட்டை சதம் தான். பாகிஸ்தானுக்கு எதிரான 2003 உலகக் கோப்பை ஆட்டத்திலும் திராவிடின் அரைசதம் தான் பிற்பகுதியில் இந்தியாவை வழிநடத்தியது. அதே போன்று ரெண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்டுகள் வென்றதற்கு திராவிட் தான் ஆதார காரனமாக இருந்தார். அடுத்து சச்சின் விவகாரம்.
சச்சின் என்றுமே வேகவீச்சை விரும்புபவராக மிதவேக பந்துவீச்சை வெறுப்பவராக இருந்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகவீச்சாளர்கள் அல்ல, பொலாக், ஹேன்சி குரோனியே போன்றவர்கள் தாம் அவரை அதிக முறை வீழ்த்தினர். அதே போன்று சச்சினை ஆதிக்கம் செலுத்திய மெக்ராத், சமிந்தா வாஸ் போன்றோரும் வேகவீச்சாளர்கள் அல்ல. பாகிஸ்தானியர்களில் ரசாக் தான் ஒருகட்டத்தில் சச்சினை தொடர்ந்து பவுல்டு செய்து வெளியேற்றினார். அவரும் மிதவேக வீச்சாளரே. மிதவேக ஸ்விங்குக்கு அடுத்தபடியாய் சச்சினின் பலவீனமாக ஆரம்பம் தொட்டே இருந்து வந்துள்ளது இடதுகை சுழல் பந்து. மிக சமீபமாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் ஆடிய போது ரயன் ஹாரிஸின் இடதுகை சுழல் பந்து சச்சினை பலவேளைகளில் திணறடித்தது. இந்தியாவில் வேகவீச்சுக்கு நடுங்குபவர்கள் வேறுபலர் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் சச்சின் நிச்சயம் இல்லை. சொல்லப்போனால் அவர் பல முக்கியமான ஆட்டங்களில் ஷோயப்பை துவம்சம் செய்துள்ளார். 2003 உலகக்கோப்பை ஆட்டம் ஒரு கிளாசிக் உதாரணம். சுவாரஸ்யமாக ஷோயப் கேலி பண்ணுவதற்கு தன்னை மிக நன்றாய் எதிர்த்தாடின இருவரையே எடுத்துள்ளார். விளையாட்டு திடலில் அவரால் திருப்பி தர முடியாததை இப்போது புத்தகத்தின் மூலம் கண்ணாடி முன் நின்று ஒண்ணு ரேண்டு என்று மாறி மாறி அறைந்து பார்க்கிறார். எதிரிகளை நொந்துகொள்வது தன் புண்ணை நோண்டி ஆய்வதை ஒத்தது. எதிரிகள் நமது பிரதிபிம்பம். சச்சின் அவரை அடித்தாலும் அவரிடம் ஆட்டம் இழந்தாலும் இரண்டுமே அக்தருக்கு பெருமைதான். அதை அவர் புரிந்து கொள்ள வில்லை என்பது அவரது ஆளுமையின் ஒரு முக்கிய பலவீனத்தை காட்டுகிறது.
(நவம்பர் 2011 அமிர்தாவில் வெளியான கட்டுரை)