காதல் பிரச்சினையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இளஞ்சிவப்பு நிறத்தில் டி-சர்ட்டும், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாகவும், கண்ணீருடனும் செல்போனில் பேசியபடி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த பெண் மேம்பாலத்தின் கைப்பிடி சுவர் மீது ஏறி உட்கார்ந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.
ஆனால் அந்தப்பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அப்போது வேகமாக ஓடிவந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து கதறி அழுதார். பின்னர் உயிருக்கு போராடிய அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இறந்தவர் பெயர் அஞ்சலி(வயது 26). மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவர் சென்னை கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் தனது 2 சகோதரர்கள்-சகோதரிகளுடன் தங்கியிருந்து, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அஞ்சலி திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.
அஞ்சலியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் அஞ்சலியின் காதலர் என்று தெரியவந்தது. அவரது பெயர் ஆல்.புவனேஸ்வர் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் சென்னை கொரட்டூர் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் தங்கியிருந்து, அஞ்சலி வேலை பார்த்த அழகு நிலையம் உள்ள கட்டிடத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அஞ்சலிக்கும், ஆல்.புவனேஸ்வருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்தனர். இந்தநிலையில் ஆல்.புவனேஸ்வருக்கு அவருடைய குடும்பத்தினர் பெண் பார்த்துள்ளனர். கடந்த 2 மாதமாக ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் மனமுடைந்த அஞ்சலி நேற்று மதியம் ஆல்.புவனேஸ்வரை சந்தித்து எதற்காக என்னை சந்திப்பதை தவிர்த்து வருகிறாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குடிபோதையில் இருந்த ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.
இதனால் வாழ்கையில் விரக்தியடைந்த அஞ்சலி அண்ணா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
அஞ்சலி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் தான் தற்கொலை செய்யும் முடிவை ஆல்.புவனேஸ்வருக்கு தெரிவித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அஞ்சலி அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்த பிறகே பதறியடித்து சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, ஆல்.புவனேஸ்வரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அஞ்சலியை தற்கொலைக்கு தூண்டியது ஆல்.புவனேஸ்வர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
அஞ்சலி இறந்த தகவலறிந்த அவரது சகோதரர்-சகோதரிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அஞ்சலியின் பிணத்தை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
பரபரப்பாக இயங்கக்கூடிய அண்ணா மேம்பாலத்திலிருந்து, மேற்கு வங்க பெண் அஞ்சலி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் நேற்று மாலை அண்ணா சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
Show commentsOpen link