லல்லுவை காப்பாற்றவே அவசர சட்டம்: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு BJP says ordinance aimed to save Lalu
Tamil NewsYesterday,
பெங்களூர், செப்.29-
கால்நடை தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பையொட்டி பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவை காப்பாற்றவே தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அவசர சட்டத்தை இயற்றியுள்ளது என வெங்கய்யா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியதாவது:-
லல்லு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில் வரும் 30ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
30ம் தேதிக்குள் அவசர சட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால், ஒருவேளை தீர்ப்பு லல்லுவுக்கு பாதகமாக அமைந்து விட்டால், அவர் எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.
பதவி இழப்பில் இருந்து அவரை காப்பாற்றவே காங்கிரஸ் இந்த அவசர சட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும், சமீபத்தில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் போல் மேலும் பலர் தொடர்பான வழக்குகளிலும் தீர்ப்பு பாதகமாக மாறலாம் என்பதையும் உணர்ந்தே காங்கிரஸ் கட்சி அவசர சட்டம் என்ற அயுதத்தை எடுத்துள்ளது.
இந்த அவசர சட்டத்தை கிழித்து தூர எறிய வேண்டும் என்று ராகுல் காந்தி பேட்டியளித்தது, காங்கிரஸ் கட்சியின் இமேஜை சரியவிடாமல் தற்காத்துக்கொள்ள செய்யப்பட்ட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் ஸ்டண்ட் ஆகும்.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முதலாளி யார்? என்பதை ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உணர்த்தியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவியை பறிக்கும்படி தீர்ப்பளித்தது.
85 நாட்கள் வரை காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ இதுதொடர்பாக வாயை திறக்கவில்லை. அவர்கள் கொண்டுவந்த அவசர சட்டம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
இதனை எதிர்த்து அனைத்து தரப்பிலும் இருந்து கண்டன குரல்கள் எழுந்த பின்னர், இந்த அவசர சட்டத்தின் நோக்கம் என்ன என்பது தொடர்பாக ஜனாதிபதி கேள்வி எழுப்பிய பின்னர் தான் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
Post a Comment