சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீலை கைது செய்ய முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு try to high court campus lawyer arrest sub inspector seal in jail
Tamil NewsToday,
சென்னை, செப். 18–
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வரும் நரம்பியல் டாக்டர் சுப்பையா என்பவருக்கும், பொன்சாமி என்ற ஆசிரியருக்கும் இடையே குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 14–ந்தேதி ராஜா அண்ணாமலை புரத்தில் தனது ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்த டாக்டர் சுப்பையா இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஆசிரியர் பொன்சாமி, அவரது தாயார் அன்னப்பழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பெய்சில், உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் செம்மஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் இடம் பெற்றுள்ளார். இவர் நேற்று மாலை வக்கீல் பெய்சிலை கைது செய்வதற்காக ஐகோர்ட்டுக்கு காரில் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த பெய்சிலை கைது செய்து காரில் ஏற்றுவதற்கு அவர் முயன்றார். இதற்கு வக்கீல் பெய்சில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மற்ற வக்கீல்களும் திரண்டனர்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் நிர்மல் குமார், உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பா, ராஜேஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
ஏராளமான போலீசாரும் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனை சுற்றி போலீசார் நின்று கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த வக்கீல்கள், சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் நிலவியது.
பின்னர் இச்சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதிகள் சுதாகர், சத்தியநாராயணன், கிருபாகரன், அரிபரந்தாமன், ராமநாதன், ரவிசந்திர பாபு ஆகியோர் தங்களது சேம்பரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், ஐகோர்ட்டு பதிவாளரிடம் ஒரு புகார் செய்தார். அதில் கோர்ட்டு வளாகத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதே நேரத்தில் வக்கீல் பெய்சிலும், ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் வெளியாட்களுடன் வந்து சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தன்னை காரில் கடத்திச் செல்ல முயன்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் பேரில், கடத்தல் முயற்சி, மிரட்டல் விடுத்தல், அத்துமீறி நுழைதல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் சங்கரநாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 8 மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுன் 8–வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் சங்கரநாராயணனை போலீசார் ஆஜர்படுத்தினர். அடுத்த மாதம் 1–ந்தேதி வரை அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து சங்கர நாராயணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு நேரடியாக சப்–இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link
Post a Comment