விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! – ரஜினி வருத்தம்
by abtamil
சென்னை: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா கிளப்பியுள்ள சர்ச்சைகள், கசப்புணர்வுகள், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழும் வரை நீடிக்கும் போலிருக்கிறது.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்றவர்களை அழைக்காமல் அவமதித்ததும் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ரஜினியை கடைசி வரிசையில் கடைசி நாற்காலியில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்திருந்தார். இந்த விழாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், 'விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது. ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். அது தவறாகிவிட்டது. ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்', என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மற்ற கலைஞர்கள் தங்கள் வேதனையைக் கூட வெளிப்படுத்த முடியாத சங்கடத்தில் உள்ளனர்.
Show commentsOpen link
Post a Comment