கிரானைட் ஊழலில் தொடர்பு: அதிகாரிகள் வங்கி லாக்கர்களில் சோதனை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை

சென்னை, செப். 17-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தற்போது சென்னையில் பணிபுரியும் மதுரை முன்னாள் கலெக்டர்கள் மதிவாணன், காமராஜ், கனிம வள உதவி இயக்குநர் ராஜாராம் கிரானைட் அதிபர்கள் பி.ஆர். பழனிச்சாமி, செல்வராஜ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்த மாவட்ட கலெக்டர்கள், கனிம வள உதவி இயக்குநர்கள், டாமின் அதிகாரிகள் மற்றும் மேலூர் பகுதியில் பணி புரிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 21 பேர் கிரானைட் முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே முன்னாள் கலெக்டர்கள் மதிவாணன், காமராஜ் உள்பட 7 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீதம் உள்ள 14 அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் குவித்துள்ள சொத்து விவரங்கள், வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் போன்ற விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சேகரித்துள் ளனர். தமிழகம் முழுவதும் அதிகாரிகள் வாங்கியுள்ள சொத்துபட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த திட்ட மிட்டுள்ளனர். இன்று அல்லது நாளை இந்த சோதனை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிரானைட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் 34 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 10 அதிகாரிகளின் வங்கி லாக்கர்கள் சிக்கியுள்ளன. அந்த லாக்கர்களுக்கான சாவிகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மதிவாணனின் ஒரு வங்கி லாக்கர் சாவி சிக்கியுள்ளது. மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான காமராஜின் வங்கி லாக்கர் சிக்கவில்லை. இதுதவிர சென்னையில் கனிம வள அதிகாரி புருஷோத்தமனுக்கு சொந்தமான 3 வங்கி லாக்கர்களும் சிக்கியுள்ளது. இவற்றை திறந்து பார்த்து சோதனை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுமதி கேட்டு முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம்.
அனுமதி பெற்று வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் முன்பு லாக்கர்களை திறந்து சோதனை நடத்துவோம். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் கிரானைட் மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வங்கி லாக்கர்கள் இன்று முதல் திறந்து சோதனையிடும் பணி நடந்து வருகிறது. ஆய்வின் முடிவில் சொத்துக்கள் விவரம் தெரிய வரும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
இதனிடையே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் தனிப்படை போலீசார் கிரானைட் முறைகேடு தொடர்பாக குவாரிகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட 22 வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி மீது மட்டும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகள், கிரானைட் அதிபர்கள் மீது இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 94 கிரானைட் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை மதிப்பிடும் பணி முடிவடைந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் கிரானைட் யூனிட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். இதன் மதிப்பு 6800 கோடி ரூபாய் ஆகும். இந்த கிரானைட் கற்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள கிரானைட் அதிபர்கள் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கிரானைட் அதிபர்கள் போலீசில் சரணடைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Post a Comment