டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்துக்கு விஜயகாந்த் ஆதரவு

சென்னை, செப். 18-
தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசு கடந்த 13-ம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்த்தியதன் விளைவாக தமிழ் நாட்டில் ரூபாய் 6.07 அளவிற்கு வரிகள் உள்பட உயர்ந்துள்ளது.
இந்திய அரசு மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதன் விளைவாக மேலும் கூடுதல் சிலிண்டர்களை ரூபாய் 400 அளவிற்கு அதிகமாக கொடுத்து சந்தை விலையில் பெற வேண்டும்.
இதுமட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவிகித அந்நிய நாட்டு கம்பெனிகள் முதலீடு போடுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் 49 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க முடிவெடுத்துள்ளது.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்கவும் முடிவெடுத்துள்ளது. ஒலிபரப்பு சேவை துறையில் 74 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இவை போன்ற நடவடிக்கைகளால் வீழ்ந்து விட்ட பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால் உண்மையில் இந்திய அரசின் இந்த முடிவுகள் சாதாரண ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும். அன்றாட வாழ்க்கையே அவர்களுக்கு பிரச்சினையாகி விடும். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே இருந்து வருகிற விலைவாசி மேலும் உயரும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும், வறுமை அதிகரிக்கும்.
இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் இவைதான் நடக்கும். இந்திய அரசு வகுத்துள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் 8.2 சதவிகிதம்தான் எட்ட முடியும் என்று அறிவித்தார்.
தற்போதைய இந்திய அரசு கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகளே இச்சீரழிவிற்கு காரணமாகும். இருந்தும் இதே கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்தவே இந்திய அரசு முனைந்துள்ளது.
உண்மையில் பாமர மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வகையில் பொருளாதார கொள்கையை மாற்றி யமைக்க இந்திய அரசு தயாராக இல்லை. இதன் விளைவாக மேலும் பொருளாதார நெருக்கடி வலுக்குமே தவிர, வளர்ச்சியோ அல்லது வறுமை ஒழிப்போ வெறும் பகல் கனவாகத்தான் முடியும்.
இந்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான போக்கை எதிர்த்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் வருகிற 20.09.2012 வியாழக்கிழமை அன்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும் மற்றும் தோழமைக் கட்சிகளும் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்துள்ளத ை தே.மு.தி.க. சார்பில் நான் வரவேற்பதுடன், முழு அடைப்பு போராட்டத்திலும் தே.மு.தி.க. கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வருகிற 20ஆம் தேதி அன்று இந்த முடிவிற்கு தமிழ்நாட்டு மக்கள் பரிபூரண ஒத்துழைப்பு நல்கி, இப்போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது இந்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
Post a Comment