விருதுநகர், சிவகாசியில் அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு விருதுநகர், சிவகாசியில் அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

சென்னை, செப்.18-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதற்கான நாற்றங்காலாக விளங்குவதுமான சிறு மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் போட்டித் திறனை அதிகரிக்கும் வண்ணம், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஏற்கெனவே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பொறியியல் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்க மாநில அரசின் பங்களிப்பில் 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை முதல் தவணையாகவும்; வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்க மாநில அரசின் பங்களிப்பில் 68 லட்சம் ரூபாயை முதல் தவணையாகவும்; திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் உ ள்ள அரிசி ஆலை குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க மாநில அரசின் பங்களிப்பில் 48 லட்சம் ரூபாயை முதல் தவணையாகவும், ஆக மொத்தம் மூன்று குழுமங்களுக்கும் சேர்த்து 1 கோடியே 65 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை விடுவித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 கோடியே 96 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு கொண்ட விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அச்சுக் குழுமத்திற்கு பொது வசதி மையம் அமைக்க, மாநில அரசின் பங்களிப்பான 90.66 லட்சம் ரூபாயில், 70 விழுக்காடு தொகையான 63.46 லட்சம் ரூபாயினை முதல் தவணையாக விடுவித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் உருவாக வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment