பாகிஸ்தானுடன் நாளை மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நாளை மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

கொழும்பு, செப். 29-
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி எப் பிரிவில் இடம் பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.
2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை (30-ந்தேதி) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் 7.30 மணிக்கு நடக்கிறது. அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்திய அணி எஞ்சிய 2 போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
அதோடு ரன்ரேட்டை உயர்த்துவதும் முக்கிய மானது. ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றதால் ரன்ரேட்டில் பின்தங்கி காணப்படுகிறது. இதனால் பாகிஸ்தானை அபாரமாக வெல்வது அவசியமானது. அதே நேரத்தில் அந்த அணி வலுவாக இருப்பதால் இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்களுடன் விளையாடிய இந்தியாவின் திட்டம் நேற்று எடுபடவில்லை. இதனால் வீரர்களின் மாற்றம் மிகவும் அவசியமானது.
2 ஆட்டத்தில் நீக்கப்பட்ட ஷேவாக் நாளைய போட்டியில் கண்டிப்பாக இடம் பெறுவார். பியூஸ் சாவ்லா நீக்கப்படுவார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங்கும், பவுலிங்கும் மோசமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இதை போக்கி திறமையை வெளிப்படுத்த வேண்டும். யுவராஜ்சிங், ரோகித்சர்மா, கேப்டன் டோனி ஆகியோரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இவர்கள் அதிரடியாக விளையாடுவது இந்தியாவுக்கு அவசியமாகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீச்சில் முத்திரை பதித்த ஹர்பஜன்சிங்கால் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முடிய வில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டால் தமிழக வீரர் எல்.பாலாஜி அல்லது அசோக் திண்டா சேர்க்கப்படலாம். பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக உள்ளது. கேப்டன் ஹபீஸ், உமர் அக்மல், இம்ரான் நாசிர், ஜாம்ஷெட் நாசிர், கமரன் அக்மல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.
பந்துவீச்சில் சுழற்பந்து வீரரான சயீத் அஜ்மல் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். இதுதவிர உமர்குல், அப்ரிடி ஆகியோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வென்று இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இரு அணிகளும் உலக கோப்பையில் 2 முறை மோதியுள்ளன. இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்று உள்ளது. இதனால் இந்திய அணி இந்த முறையும் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய ஆட்டத்தில் இந்திய தோற்றால் அரை இறுதி வாய்ப்பை இழந்துவிடும். இந்த ஆட்டம் தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முன்னதாக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
Post a Comment