ராஜபாளையம்: மாநில அளவிலான கபடி போட்டிகள் 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு ராஜபாளையம்: மாநில அளவிலான கபடி போட்டிகள் 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

ராஜபாளையம், செப். 29-
ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப் பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அம்மா சுழற்கோப்பைக்காக ஆடவர் மற்றும் மகளிர்களுக்கு இடையே மூன்று நாட்கள் நடைபெறும் 26-வது மாநில கீழ் இளையோர் கபடி சேம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட கபடிக்கழக சேர்மனும், நகர்மன்ற உறுப்பினருமான மணிகண்டராஜா தலைமை வகித்தார்.
நகர்மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. நகர செயலாளர் கவுன்சிலர் பாஸ்கரன், நகர பேரவை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட கபாடி கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராம்சிங், கபாடி கழக மாநில துணை தலைவர் கபாடி ஏ.பி.எஸ். ராஜா ஆகியோர் வரவேற்று பேசினார்கள். மாநில கபாடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா, மாநில துணைத்தலைவர் நாகராஜன், டைகர் பிராண்ட் ரோலிங் ஷட்டர் உரிமையாளர் டைகர் சம்சுதீன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
மகளிர்களுக்கு இடையேயான போட்டிகளை நகர் மன்ற தலைவர் தனலட்சுமி செல்வசுப்பிரமணிய ராஜாவும், ஆடவர்களுக்கு இடையேயான போட்டிகளை மாவட்ட பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜாவும் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் போட்டிகள் நடத்தப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு தங்கத்தாரகை அம்மா சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச உள்ளார்.
மாநிலம் முழுவதும் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணி முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இங்கு தேர்வு செய்யப்படும் தமிழ்நாடு அணிகள் ஆந்திர மாநிலம் ஹனுமன் சந்திப்பில் நடைபெற இருக்கும் 26-வது தேசிய போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில கபடி கழகத் துணை தலைவர் கபடி ஏ.பி.எஸ். ராஜா, விருதுநகர் மாவட்ட கபடிக் கழக சேர்மன் மணிகண்டராஜா ஆகியோர் செய்து உள்ளனர். தொடக்க நாளை முன்னிட்டு கபடி வீரர், வீராங்கனைகள் பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக அணிவகுத்து சென்று விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.
Post a Comment