2ஜி விவகாரத்தில் நிதியமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் கோபமடைந்த நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு ஞாபக மறதி உள்ளது. நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை என்று ஜோக்கடித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் நிருபர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். நேற்று அவர் வழக்கம்போல் நிருபர்களை சந்தித்தபோது, அவரது துறை தொடர்பான விஷயங்களை விட்டுவிட்டு 2ஜி விவகாரம் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனால், அவற்றை தனது புத்திசாலித்தனத்தால் சமாளித்தார் சிதம்பரம். கேள்விகளுக்கு சளைக்காமல் குண்டக்க மண்டக்க பதிலளித்து நிருபர்களை அசர வைத்தார்.
கேள்வி: 2ஜி விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு வழியாக சமரசத்தில் முடிந்துள்ளது. இதை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், பிராணாபுக்கு கிடைத்த தோல்வியாகவும் எடுத்துக் கொள்ளலாமா?
ப.சிதம்பரம்: இது உள்துறை அமைச்சகம் சம்பந்தமான கேள்வி இல்லையே. நீங்கள் சொல்வதுபோல் எந்த ஒரு சம்பவமும் உள்துறை அமைச்சகத்தில் நடக்கவில்லையே.
கேள்வி: 2ஜி விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் நீங்கள் ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா?
ப.சிதம்பரம்: எனக்கு ஞாபக மறதி உள்ளது. நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை.
கேள்வி: சரி, கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை நீங்கள் ராஜினாமா செய்ய முன் வந்தீர்கள்?
ப.சிதம்பரம்: எனக்கு ஞாபக மறதி மட்டுமல்ல, கணக்கிலும் பலவீனம் உண்டு.
கேள்வி: நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரே ஒரு தடவை ராஜினாமா செய்ய முன் வந்திருப்பீர்களா?
ப.சிதம்பரம்: உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போதுதான் நான் எண்ணக் கற்று வருகிறேன்.
கேள்வி: நீங்கள் இப்படி பதிலளித்தால் அது மேலும் யூகங்களுக்குத்தானே இடமளிக்கும்?
ப.சிதம்பரம்: உண்மைதான். இந்த யூகங்கள் உங்களது பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பப் பயன்படுமே?. அது தொடரட்டும்.
கேள்வி: அப்படியென்றால் நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததை மறுக்கவில்லை.. அப்படித்தானே?
ப.சிதம்பரம்: இது எனது அமைச்சகம் சார்ந்த கேள்வி அல்ல. அதனால் இதற்கு என்னிடம் பதில் இல்லை.
கேள்வி: உங்களுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் இடையே தொடர் மோதல் ஏற்பட்டுள்ளதே?
ப.சிதம்பரம்: இதுவும் உள்துறை அமைச்சகம் சார்ந்த கேள்வி அல்ல.
மேலும் அவர் கூறுகையில், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு தற்போது 9 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 6 எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் அல்லது அதற்கு இணையான ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட உள்ளன. அதேபோல், தற்போது 71,000 துணை ராணுவ வீரர்கள் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கூடுதலாக 5,000 வீரர்கள் அனுப்பப்பட இருக்கிறார்கள்.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் போலீஸ் நிலையங்கள் கட்டவும், போலீஸ் நிலையங்களை வலுப்படுத்தவும், போலீஸ் படையை வலுப்படுத்தவும் மத்திய அரசு ரூ.100 கோடியை அனுமதித்துள்ளது.
ஹக்கானி இயக்கம் உள்பட பல தீவிரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக இந்தியா ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறது. ஆனால், இப்போதுதான் தாமதமாக அமெரிக்கா இதை கண்டுபிடித்துள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நாம் தேடி வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறான் என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர் அங்கு இல்லை என்று பொய் சொல்லி வருகிறது.
அத்வானியின் ரத யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனால், பாஜக கட்சியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்தால் நிச்சயம் பரிசீலிக்கப்படும்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு மீது ஜனாதிபதி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆகவே அதுபற்றி இப்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றார் சிதம்பரம்.
Post a Comment