தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர ் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை சங்க விதிகளின் சட்டப்படிதான் நீக்கியிருக்கிறோம் என பொறுப்புத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு தொடர்பாக ஃபெப்ஸி அமைப்பினருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பிரச்னையை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்துக்கு நீக்கியும் அடுத்த நான்கு மாதத்துக்குள் தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை இப்ராஹிம் ராவுத்தர் பொறுப்புத் தலைவராக பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு கூடிய அவசரக் கூட்டத்தில் இப்ராஹிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் கேயார், கே. ராஜன், முரளிதரன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை சிறப்புப் பொதுக்குழு நீக்கியது முற்றிலும் சட்டப்பூர்வமானதே. பொதுக்குழுவில் நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்களை சட்டப்படி முறையாக பதிவுத்துறைக்கு அனுப்பிவிட்டோம்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு சார்பாக நடந்துகொண்டார். அவர் பேசியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரிவை உருவாக்கும் நோக்கத்திலேயே இருந்தது.
பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாத சூழ்நிலையில் அவருடைய மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடையில்லாமல் நடைபெற்று வருவதில் இருந்தே இதை புரிந்துகொள்ளலாம்.
மேலும் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் மூன்று மாதங்களை விடுமுறையிலேயே கழித்துள்ளார் எஸ்.ஏ.சி. அதோடு சக நிர்வாகிகளிடமும் சங்க ஊழியர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டார். ஒரே அணியில் உள்ள எங்களிடமே இப்படி நடந்துகொண்டால் ஃபெப்ஸி அமைப்பினரிடம் இவர் எப்படி பேச்சுவா ர்த்தையை சுமுகமாக நடத்துவார்?
அதனால்தான் அவரையும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் பொதுக்குழுவைக் கூட்டி நீக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை நீக்கியது பொதுக்குழுவில் கூடிய 292 தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு. அதை மாற்ற முடியாது.
இனி நாங்கள் சார்ந்த அணியினர் சார்பாக ஃபெப்ஸி அமைப்பினருடன் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையை விரைவில் தீர்ப்போம் என்று தெரிவித்தனர்.
Post a Comment