தனது மகளுக்குச் சூட்ட நல்ல பெயராகப் பரிந்துரைக்குமாறு ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேக் பச்சன்.
மற்ற நடிகர், நடிகையருக்கும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினருக்கும் இடையே இமயமலை அளவுக்கு வித்தியாசம் உள்ளதை சமீப நாட்களாக தொடர்ந்து செய்திகளைப் படித்து வருவோர் உணர முடியும்.
வழக்கமாக நடிகர், நடிகையருக்கு குழந்தை பிறந்தால் அதை படு ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். என்ன குழந்தை பிறந்தது என்பதை மட்டும் பிரஸ் ரிலீஸ் மூலம் கொடுத்து விட்டு அத்தோடு கப்சிப்பாகி விடுவார்கள். அது நிச்சயம் தனிப்பட்ட விஷயம்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் அபிஷேக் பச்சனும், அமிதாப் பச்சனும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவர்ந்து விட்டனர். இந்தியர்கள் அத்தனை பேரும் தங்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற உணர்வுடன் அவர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது - ஐஸ்வர்யா ராய் குறித்த செய்திகளை அவர்கள் மாறி மாறி மக்களுக்குத் தந்து கொண்டிருப்பது.
வழக்கமாக மீடியாக்காரர்கள்தான் இப்படி மாய்ந்து மாய்ந்து செய்தி கொடுப்பார்கள். ஆனால் அமிதாப்பும், அபிஷேக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தை குறித்த செய்தியை தினசரி அப்டேட் செய்து கொண்டுள்ளனர்.
ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டர் மூலம் இருவரும் மக்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் குழந்தை எப்படி உள்ளது, ஐஸ்வர்யா எப்படி உள்ளார் என்பதையும் தொடர்ந்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தனது மகளுக்கு நல்ல பெயராக பரிந்துரையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் அபிஷேக்.
இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது குழந்தைக்கு ஏ என்று ஆரம்பிக்கும் வகையிலான ஒரு நல்ல பெயரை பரிந்துரையுங்கள். உங்களது பரி்ந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்று கூறியுள்ளார் அபிஷேக்.
அவர் மேலும் கூறுகையில், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நன்றியுடன் ஏற்கிறோம். இதுவரை 8 லட்சம் வாழ்த்துகள் வந்து விட்டன. மிகப் பெரிய வரவேற்பு இது. தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அனைவருக்கும் எங்களது நன்றிகள். எனது மகள் மிகவும் அதிர்ஷ்டக்காரி, இத்தனை பேரின் வாழ்த்துகள் அவளுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் அபிஷேக்.
மறுபக்கம் மாமனார் அமிதாப் பச்சன், தனது பேத்தி வீட்டுக்கு வரும்போது அவளை தடபுடலாக வரவேற்க கேமராக்களுடன் தயாராகி வருகிறாராம்.இதுகுறித்து அவர் ட்விட்டர் எழுதுகையில், அந்தக் குட்டிக் குழந்தையை விட்டுசிறிது நேரம் கூட பிரிந்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் வீட்டுக்கு வரும்போது வீடியோவில் ஷூட் செய்யவும், கேமராவில் படம் பிடிக்கவும் தயாராக இருக்க வேண்டுமே. அதைநான் தற்போது வீட்டில் செய்து கொண்டிருக்கிறேன். எனது பிறப்பின்போது கூட நான் இத்தனை மகிழ்ச்சியான சூழலில் இருந்திருக்க மாட்டேன் என்று கூறி சந்தோஷப்பட்டுள்ளார்.
Post a Comment