News Update :
Home » » தேனியை அசர வைத்த பாரதிராஜாவின் பட துவக்க விழா

தேனியை அசர வைத்த பாரதிராஜாவின் பட துவக்க விழா

Penulis : karthik on Monday 21 November 2011 | 21:48

அல்லி நகரத்தின் மலையடிவாரத்திலிருக்கும் அந்த பிரமாண்ட மருதமரம் ஆயிரம் ஷுட்டிங்குகளை கூட பார்த்திருக்கும். ஆனால் தன் மடியில் தவழ்ந்த மகனை தமிழ் திரையுலகமே கொண்டாடி மகிழ்ந்ததை அன்று மட்டும்தான் பார்த்திருக்கும். இதோ, நீங்க பார்க்குறீங்களே இந்த மரம். என் பாட்டன் முப்பாட்டனையெல்லாம் பார்த்த மரம். இங்கேதான் நானும் விளையாடினேன்.
பல நாட்கள் இந்த மரத்திற்கு கீழே ஆடு மேய்ச்சிருக்கேன். இங்கதான் இந்த விழா நடக்கணும்னு நினைச்சேன். அதனால்தான் சென்னையிலே இருந்து தமிழ்திரையுலகத்தின் ஜாம்பவான்களை எல்லாம் இந்த மண்ணுக்கு வரவழைச்சேன் என்றார் பாரதிராஜா. (அந்த மருத மரம்? அடடா... கிளைகள் கூட ஒரு யானையின் அகலத்தில் இருந்ததுதான் வியப்பு, அழகு)

மிக நெகிழ்ச்சியான நாள் அது. பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, வைரமுத்து போன்ற மாபெரும் படைப்பாளிகளை நாற்காலியில் அமர வைத்துவிட்டு மிக இயல்பாக தரையில் அமர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் பாரதிராஜா. பலரை பெயர் சொல்லி அழைத்ததும், போங்களேண்டா அந்தப்பக்கம் என்று தள்ளியதும், சிலரை கன்னத்தில் அறைந்து விரட்டியதும் கூட ஊர் மக்கள் மீது கொண்ட அளவுக்கதிமான பாசத்தாலும் உரிமையாலும்தான். தன் ஏற்புரையில், நான் உங்களையெல்லாம் விரட்டினேன், அடிச்சேன். அதையெல்லாம் நீங்கள் பொறுத்துக் கொண்டது என் மீது கொண்ட பாசத்தினால்தான் என்றார் பாரதிராஜாவே.

முன்னதாக சென்னையிலிருந்து இந்த விழாவுக்காக வந்திருந்த திரையுலக பிரமுகர்களை மேளதாளம் கரகாட்டம் தாரை தப்பட்டை சகிதம் வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. (அத்தனை பேருக்கும் தனித்தனியாக கட் அவுட்டுகளை வைத்து தேனி நகரத்தையே அரசியல் மாநாடு போலாக்கியிருந்தார்கள். கட் அவுட் வைத்திருந்தும் சரத்குமார், ராதிகா, சேரன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வரவில்லை. ஏனோ?)

எல்லாரும் மேடையில் அமர்ந்ததும் ஊரே சேர்ந்து சீர் கொண்டு வந்தது. அதில் சில பெண்கள் கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி. இருவர் மட்டும் மணிரத்னம் மூக்கை டச் பண்ணுகிற அளவுக்கு வேப்பிலையை ஆட்ட, அதிர்ந்து போனார் அவர். பெருத்த ஆட்டு கிடா ஒன்றை மாலை போட்டு மஞ்சள் தடவி அழைத்து வந்தார்கள். பக்கத்திலேயே அரிவாளும் ஆட்டமுமாக நடந்து வந்தார் பெரிய மீசை வைத்த ஆள். அவரது அரிவாளுக்கும் மாட்டியது மணிரத்னத்தின் மூக்கு நுனிதான். இந்த திடீர் ஆட்டத்தை ரசித்துக் கொண்டே தன்னை காப்பாற்றி கொள்கிற பெரும் அவஸ்தையிலிருந்தார் மணி. கம்பீரமாக நடந்து வந்த ஆடு அடுத்த ரெண்டே மணி நேரத்தில் நமது இலையில் பீஸ் பீசாக இருந்தது. கவளத்தை குழம்போடு பிசைந்து அடிக்கையில் கொஞ்சம் பாவமாக கூட இருந்தது. (கொன்னா பாவம், கொதிச்சா போச்சு)

ஆட்டுக்கறியை மிஞ்சுகிற அந்தஸ்தும் இருந்தது அந்த விழாவில். குஷ்பு, சுகன்யா, கார்த்திகா, இனியா என்று ஒவ்வொரு நடிகையும் மேடைக்கு வரவர, தன் கொழுத்த மீசையே குறைந்து போகிற அளவுக்கு விசிலடித்து தீர்த்தார்கள் அல்லிநகர ராஜாக்கள். வானமும் அவ்வப்போது பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தது. மழை விடுவதும், பின் தொடர்வதுமாக இருந்ததில் ஒதுங்க இடமில்லாமல் அத்தனை பேரும் தெப்பல்.

எங்கள் படைப்பு, எங்கள் வரிகள், எங்கள் உணர்வு, எங்கள் உணர்ச்சி எல்லாம் இந்த மண்ணிலிருந்து சுரண்டியதுதான். இந்த மண்ணில் பார்த்ததைதான் நாங்கள் திரையில் பதிவு செய்தோம். அதனால் இந்த மண்ணுக்கு நாங்கள் அதிகம் கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி இந்த மக்களுக்கும், அவர்களது கல்விக்கும் ஒரு பெரும் தொகையை சமர்ப்பிக்க போகிறோம் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. தனது சார்பில் ஐந்து லட்ச ரூபாயையும் கொடுத்தார் அவர். இந்த படத்திற்கு நான் பாடல் எழுதுவதற்காக எவ்வளவு தருகிறார்களோ, அதையும் கூடுதலாக தருவேன் என்று பேசிக்கொண்டே போக, இடையில் குறுக்கிட்டார் பாரதிராஜா.

நீ எவ்வளவு பெரிய கலைஞன்? உனக்கு பணம் கொடுத்து உன்னை அவமானப்படுத்த விரும்பவில்லை என்றார். உடனே எழுந்து பதிலளித்த வைரமுத்து என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை. அதையும் இந்த மேடையிலேயே வைத்து அவமானப்படுத்தினால் இன்னும் சந்தோஷம் என்று சொல்ல, அந்த ஏரியாவே கலகலப்பானது.

நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய அற்புதமான நிகழ்ச்சி இது. ஆனால் தொகுப்பாளர் ஜோ மல்லுரி என்பவர்தான் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏலம் விடுவது மாதிரி மொத்த விழாவையும் சொதப்பினார். இந்த லட்சணத்தில் விழாவை நடத்துகிற பொறுப்பையும் இவரிடம்தான் ஒப்படைந்திருந்தாராம் பாரதிராஜா.

எத்தனையோ பேரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, முதன் முறையாக தான் பிறந்த ஊரான அல்லி நகரத்திலிருந்து லட்சுமணன் என்ற இளைஞனை ஹீரோவாக்கியிருக்கிறார் இந்த படத்தில். இவர்தான் கொடிவீரனாம்.

அந்த வானுயர்ந்த மருத மரத்திற்கு கீழே லட்சுமணனுக்கும் கூட விழா எடுக்கிற நாள் அமையட்டும். அதுதான் பாரதிராஜாவுக்கும் பெருமை.
நன்றி ஆர்.எஸ்.அந்தணன்
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger