2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி 400 பக்க புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தனது அறிக்கையில் குற்றம் சாட்டி உள்ளது. இவ்விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மந்திரி மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் திகார் ஜெயிலில் உள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் இந்த அளவிற்கு பூதாகரமாக எழும்ப மத்திய கணக்கு தணிக்கை துறை மட்டு மின்றி தகவல் அறியும் உரிமைச் சட்டமும் காரணம் ஆகும். இதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தான் இவ் விவகாரத்தை ஊத்தி மூடி விடாமல் தடுத்துள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கும், பல்வேறு அமைச்சகங்களுக்கும் இடையே நடைபெற்ற கடித போக்குவரத்து விவரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிலர் மனு செய்திருந்தனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களில் இருந்து தகவல்கள் தரப்பட்டன. அந்த கடிதங்களில் இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், டெல்லியைச் சேர்ந்த பிரபல வக்கீலுமான விவேக் கார்க், இந்த கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக தயாரித்துள்ளார். 2 ஜி வெடிகுண்டு- வடக்கு பிளாக்கை அசைத்த தகவல் அறியும் உரிமைகள் என்று அந்த புத்தகத்துக்கு பெயரிட்டுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் எம்.பி.க்கள், முன்னாள்- இன்னாள் மந்திரிகள், பிரதமர் மற்றும் செயலாளர்கள் மட்டத்திலான அதிகாரிகள் இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்கள், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 400 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது.
Post a Comment