தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருக்கும் கபிலனின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இப்போதைக்கு மின் கட்டண உயர்வை ஆணையம் அறிவிக்காது என்று தெரிகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்விலை, பேருந்து கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டன. பஸ் கட்டண உயர்வை ராவோடு ராவாக போக்குவரத்துக் கழகங்கள் அமல்படுத்தின. பால் விலை உயர்வும் அமலுக்கு வந்து விட்டது.
இந்த நிலையில், மின்சாரக் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மின்சாரக் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கும் என்று மக்களிடையே பீதி நிலவிக் கிடக்கிறது.
ஏற்கனவே பேருந்து கட்டணம், உயர்த்தப்பட்டதற்கும், பால் விலை உயர்வுக்கும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியும் எதிர்ப்பு வலுத்துள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் இந்த கட்டண, விலை உயர்வு குறித்துதான் பேசிக் கொண்டுள்ளன். அதிமுக அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மின்கட்டண உயர்வு எந்தளவிற்கு 'ஷாக்' அடிக்குமோ என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தற்போதைய தலைவர் கபிலனின் பதவிக்காலம் 2012, ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. மின்கட்டணத்தை திருத்துவதாக இருந்தால் குறைந்தது 4 மாத கால அவகாசம் ஆணையத்திற்குத் தரப்பட வேண்டும்.
ஆனால் தற்போது கபிலன் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதால், மின் கட்டணம் இப்போதைக்குத் திருத்தப்பட வாய்ப்பில்லை. மேலும் நான்கு மாத கால அவகாசம் தேவை என்பதால் குறைந்தது ஏப்ரல் மாதம் வரை மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் நம்பலாம்.
கபிலனுக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. மின்சாரச் சட்டம்-2003ன் படி, ஒழுங்கு முறை ஆணையத் தலைவரை தேர்வு செய்ய மாநில அரசு ஒரு தேர்வுக் கமிட்டியை அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.அந்தக் குழு புதிய தலைவரின் பெயரை அரசுக்குப் பரிந்துரைக்கும்.
ஆனால் கபிலனுக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கமிட்டியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. எனவே இப்போதைக்கு மின் கட்டண திருத்தம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
Post a Comment