சதமடிக்கும் போது ஏற்படும் படபடப்பை போக்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்து விட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளாராம்.
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது சர்வதேச 100வது சதம் என்ற மைல் கல்லை கடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் காத்திருப்பு தொடர்கிறது. ஆனால் அதை எட்ட முடியாமல் சச்சின் தவித்து வரும் நிலையில் நாளை மும்பையில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியின் போதாவது சச்சின் 100வது சதத்தைப் போடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சச்சின் கிரிக்கெட் ஆடி வருகிறார் என்று பலரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு கடந்த 22 வருடங்களாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார் சச்சின். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். உலகக் கோப்பையைப் பெறும் இந்திய அணியில் தானும் இடம் பெற வேண்டும் என்று சச்சின் ஆசைப்பட்டார். கடந்த உலக கோப்பையை இந்திய அணி வென்றதன் மூலம் சச்சினின் அந்த ஆசை நிறைவேறியது.
கிரிக்கெட் உலகில் முறியடிக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ள சச்சின், மற்றொரு முக்கியமான சாதனை மைல்கல் ஒன்றை கடக்க தற்போது திணறி வருகிறார். கிரிக்கெட் போட்டிகளில் 100வது சதம் அடிக்கும் முதல் கிரிக்கெட் வீரர் என்பதே அந்த சாதனை மைல்கல். கடந்த மார்ச் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 99வது சதத்தை அடித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்.
ஆனால் அதன்பிறகு அவர் விளையாடிய 15 போட்டிகளில் சதமடிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டியை காணவும், பலத்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இங்கிலாந்துடனான போட்டியின்போது 91 ரன்கள் வரை வந்து ஏமாற்றம் அளித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் சச்சினின் சொந்த ஊரான மும்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. ஆனால் இந்த மைதானத்தில் கடந்த 1997ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு சதம் மட்டுமே சச்சின் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறையாவது சச்சின் சதமடித்து, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சதமடிக்கும் போது ஏற்படும் படபடப்பை போக்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்து விட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளார். இந்த முறை சச்சின் 100வது சதம் அடிப்பாரா அல்லது வழக்கம் போல ஏமாற்றத்தை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post a Comment