அமெரிக்காவுக்குள் நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமிழர் விரோத செயலாகும். மத்திய அரசின் தலையீட்டால்தான் என்னை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். என்னை விடுதலைப் புலி போலவே அவர்கள் நடத்தினர் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.
நியூயார்க்கில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சீமான் அங்கு சென்றார். ஆனால் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர், விடுதலைப் புலிகளுக்காகவே நீங்கள் கட்சி ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்களது விசாவும் முடிந்து விட்டது. எனவே உள்ளே அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் சீமானிடம் கூறினராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சீமான், அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்றும் ஏன் என்னை அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உரிய காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் கூறவில்லை. மாறாக திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதையடுத்து சீமான் சென்னை திரும்பினார்.
நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய சீமானை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சிகள் கொடிகளுடன் திரண்டு வந்து வரவேற்றனர். பின்னர் சீ்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விசா உள்ளிட்ட உரிய பயண சீட்டுகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற என்னை அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.
அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. விடுதலைப்புலி போலவே அவர்கள் என்னை நடத்தினர்.
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னை விமான நிலையத்தில் இறங்குவதற்கு இங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்ததுபோல, அமெரிக்காவில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழர் விரோத செயலாகும் என்றார்.
Post a Comment