வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி, பிரக்யான் ஓஜா பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் பரத்வைட்டை `ஸ்டம்பிங்' செய்து ஆட்டம் இழக்க செய்தார். 62-வது டெஸ்டில் விளையாடும் டோனி வீழ்த்திய 199-வது அவுட் இதுவாகும்.
இந்திய வீரர்களில் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி 88 டெஸ்டில் விளையாடி 198 விக்கெட்டுகளை ஆட்டம் இழக்க வைத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை நேற்று டோனி தகர்த்தார். மேலும் அவர் அஸ்வின் பந்து வீச்சில் சாமுவேல்ஸ் அடித்த பந்தை கேட்ச் செய்து ஆட்டம் இழக்க செய்தார்.
இது அவரது 200-வது விக்கெட் சாய்ப்பாகும். டோனி 174 பேரை கேட்ச் செய்தும், 26 பேரை ஸ்டம்பிங் செய்தும் ஆட்டம் இழக்க வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை ஆட்டம் இழக்க வைத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பவுச்சர் (139 டெஸ்டில் 521 அவுட்) முதலிடத்தில் உள்ளார்.
டோனி இந்த வரிசையில் 13-வது இடத்தில் உள்ளார். டோனி, கிர்மானி தவிர இந்திய விக்கெட் கீப்பர்களில் கிரன்மோரே (49 டெஸ்டில் 130 அவுட்), நயன் மோங்கியா (44 டெஸ்டில் 107 அவுட்) மட்டுமே 100-க்கு அதிகமான விக்கெட்டுகளை ஆட்டம் இழக்க வைத்துள்ளனர்.
Post a Comment