தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் இன்னொரு அணியும் மோதிக் கொள்கிறார்கள். இருவருமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் அரசின் சலுகைகளை உரிமையோடு பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை சங்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
யாருக்கு வாக்களிப்பது என்பதுதான் அந்த குழப்பம். 2007 ம் ஆண்டிலிருந்து ஒரு படத்திற்கு ஏழு லட்சம் வீதம் சுமார் 500 படங்களுக்கு அரசின் மானியத் தொகை தர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தொகை கடந்த ஆட்சியிலேயே வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையில் இருந்த உறுப்பினர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே நிலவியது. இந்த முறை இந்த தொகையை வாங்கித்தர இருவருமே முயற்சி எடுப்பதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முதல் நாள் கூட தங்கள் பலத்தை காண்பிப்பதற்காக தனித்தனி ஆதரவாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க முன் அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கும் இந்த சந்திப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று எஸ்.ஏ.சி தரப்பில் கூறப்பட்டாலும், முதல்வருடனான இந்த சந்திப்பு தேர்தல் முடிவுகளை லேசாக அசைக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
Post a Comment